

ஓட்டல் அறைகளை செயலி மூலம் பதிவு செய்ய உதவும் ஓயோ நிறுவனம், தனது பணியாளர்களை மே 4-ம் தேதி முதல் 4 மாதம் விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் சம்பளம் 25 சதவீத அளவுக்கு குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓட்டல் சார்ந்த சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இந்நிறுவனத்தில் 10 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.
மிகவும் நெருக்கடியான இந்த சூழலில் ஓயோ பணியாளர்கள் மே 4-ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு விடுமுறையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட்2020 வரை விடுமுறையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஓயோ இந்தியா நிறுவன தெற்காசிய தலைமைச் செயல் அதிகாரி ரோஹித் கபூர் தெரிவித்துள்ளார்.
விடுமுறையில் பணியாளர்கள் சென்றாலும் அவர்கள் மருத்துவக் காப்பீடு, பெற்றோருக்கான காப்பீடு வசதி, குழந்தைகளின் கல்விக்கட்டணம், பணிக் கொடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மருத்துவ செலவுத் தொகை காப்பீட்டுத் தொகையைவிட அதிகமானால், நிறுவனம் மூலமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள வேண்டும். விரைவிலேயே சகஜ நிலை திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான அடிப்படை ஊதிய தொகையில் 60 சதவீதம் 2 தவணைகளில் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊதியத்தில் 25 சதவீதக் குறைப்பு ஏப்ரல் முதல் ஜூலை வரை அமல்படுத்தப்படும் என்றும் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.