

ஏப்ரல் ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் காலாண்டில் 204.9 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை இப்போது 154.4 டன்னாக சரிந்திருக்கிறது.பங்குச்சந்தை ஏற்றம், கிராமப்புற இந்தியாவில் மழை குறைவு, தேவை குறைவு ஆகிய காரணங்களால் தங்கத்தின் தேவை குறைந்தது.
இருந்தாலும் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தேவை 7 சதவீதம் மட்டுமே குறைந்திருக்கிறது. கடந்த 2014-ம் வருடம் முதல் பாதியில் 372 டன்னாக இருந்த தேவை இப்போது 346 டன்னாக குறைந்திருக்கிறது.
கடந்த ஆண்டில் இந்தியாவின் தேவை 841 டன்னாக இருந்தது. இந்த வருடம் 900 முதல் 1000 டாலர் வரை இருக்கக்கூடும் என்று உலக தங்க கவுன்சில் கணித்திருக்கிறது.
சர்வதேச தேவை குறைந்தது
இரண்டாம் காலாண்டில் சர்வதேச அளவில் தேவை 12 சதவீதம் குறைந்தது. இது ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும். இந்திய மற்றும் சீனாவில் நுகர்வோர் தேவை குறைவு சர்வதேச அளவிலும் எதிரொலித்தது.
அதே சமயத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தேவை உயர்ந்தது. தொடர்ந்து 18-வது காலாண்டாக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி வருகின்றன என்று உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார்.