Published : 13 Apr 2020 05:36 PM
Last Updated : 13 Apr 2020 05:36 PM

20 கோடி ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு ரூ. 500: நேரடியாக வழங்கிய ஊழியர்கள்

பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 20.39 கோடி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.500 என்ற வகையில் 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

கரோனா நிவாரண நிதியாக ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என்று மத்திய அரசுஅறிவித்தது. அதன்படி இந்த ஏப்ரல் மாதத்துக்கு ரூ.500 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிச் சேவைகள் மற்றும் வங்கிகள் துறையின் ஒத்துழைப்புடன், ஊரக வளர்ச்சித் துறையின் தீன்தயாள் அந்த்யோதயா திட்ட - தேசிய ஊரக வாழ்க்கைநிலை லட்சிய நோக்குத் திட்டத்தின் மூலம், இந்த நிதியை அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிதிச் சிக்கலைக் கையாள வசதியாக, பிரதமரின் கிசான் திட்டக் கணக்குகளுக்கு ரூ.2000 செலுத்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல் ஆகிய திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதால், அதை எடுப்பதற்கு வங்கி வளாகங்களில் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல இடங்களில், கிராமப்புற வீடுகளில் இந்தப் பணத்தைக் கொண்டு சேர்ப்பதில் வணிகத் தொடர்பாளர் மற்றும் வங்கியின் பிரதிநிதியாகப் பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.

வணிகத் தொடர்பாளர் மற்றும் வங்கியின் பிரதிநிதியாகப் பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் பங்கின் முக்கியத்துவத்தை அனைத்து வங்கிகளும் புரிந்து கொண்டு, கோவிட்-19 முடக்கநிலை காலத்தில் அத்தியாவசிய சேவைக்கான அனுமதி அடையாள அட்டைகளை வழங்கின.

8800 வங்கித் தொடர்பாளர்கள் மற்றும் 21600 வங்கிப் பிரதிநிதிகளில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் தாங்களாக முன்வந்து ஊரடங்கு காலத்தில் பணியாற்றினர். அசாம் தொடங்கி மிசோரம், சிக்கிம், மணிப்பூர், பிகார் வரையிலும், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேதம், தமிழ்நாடு வரையிலும் அவர்கள் சேவையாறறினர்.

வங்கிப்பிரதிநிதிகள், வங்கிக்கிளைகளில் கூட்டம் சேராதவாறு பார்த்துக் கொள்வதில் கிளை மேலாளர்களுக்கு உதவியாக இருந்தனர். கிராமப்புற மக்களிடம் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை உறுதி செய்து, கிளை மேலாளர்களுக்கு உதவிகரமாக இருந்தனர்.

வங்கி வணிகத்தொடர்பாளர் மற்றும் வங்கிப்பிரதிநிதிகளாகப் பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், மத்திய அரசு வழங்கும் நிவாரணத் தொகுப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றனர். சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு ஆட்பட்டிருந்த கிராமப்புற மக்கள், அவர்களின் மூலமாக வங்கிச் சேவைகளை தங்கள் வீட்டு வாசலிலேயே பெற முடிந்துள்ளது. வங்கிச் சேவை இல்லாத பகுதிகளிலும் முடக்கநிலை காலத்தில் தங்கள் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வங்கி வணிகத் தொடர்பு மையத்தின் சேவைகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x