

ஃபேஸ்புக் நிறுவனரும், அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க்கின் பாதுகாப்பு மற்றும் விமானப் பயணத்துக்குக் கடந்த வருடம் மட்டும் 23.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இது 2018 செய்த செலவை விட 3.4 மில்லியன் டாலர்கள் அதிகமாகும்.
ஃபேஸ்புக் நிறுவனம் தாக்கல் செய்த நிதி அறிக்கையின் படி, ஸக்கர்பெர்க்கின் தனிப்பட்ட விமான பயணத்துக்குக் கூடுதலாக 2.95 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த 23.4 மில்லியன் டாலர்களில் ஸக்கர்பெர்க் மற்றும் அவர் குடும்பத்தின் பாதுகாப்புக்காக இருக்கும் 10 மில்லியன் டாலர்களும் அடக்கம்.
ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக்கிலிருந்து ஒரு டாலர் மட்டுமே ஒரு வருடத்துக்குச் சம்பளமாகப் பெறுகிறார். ஆனால், நிறுவனம் அவருக்காகச் செலவழிக்கும் பணத்தின் அளவு 2018-ம் ஆண்டு 22.6 மில்லியன் டாலராக இருந்தது. இது 2017-ல் செலவான 9.1 மில்லியன் டாலர்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான செலவாகும்.
ஃபேஸ்புக்கின் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க்கின் சம்பளம் 8,75,000 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருக்கிறது. ஆனால் 9,02,740 மில்லியன் டாலர்களை ஊக்கத்தொகையாக சாண்ட்பெர்க் பெற்றுள்ளார். மேலும், 19.67 மில்லியன் டாலர்கள் பங்கு மதிப்பாக வைத்துள்ளார். மேலும் சாண்ட்பெர்க்கின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு 4.37 மில்லியன் டாலர்கள் கடந்த வருடம் செலவழிக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்புக்கின் நிறுவனர், தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, பெரும்பான்மை பங்குகள் வைத்திருப்பவர் ஆகிய நிலைகளில் இருப்பதால் ஸக்கர்பெர்க்கின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், அதனால்தான் பாதுகாப்பு ஒட்டுமொத்தமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.