

செல்போன் சேவையையும் அத்தியாவசிய தேவையாக அறிவித்து மத்திய அரசு மானியம் அறிவிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செல்போன் நிறுவனங்கள் சார்பில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் செல்போனும் அத்தியாவசிய சேவையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
செல்போன் வாடிக்கையாளர்கள் குறிப்பாக பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்யாமலேயே சேவை தொடர அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோல குறிப்பிட்ட தொகையை பேசுவதற்கு ஒதுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே செல்போனையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்க வேண்டும். மற்ற அத்தியாவசிய சேவைக்கு மானியம் வழங்குவது போலவே எங்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.