Published : 09 Apr 2020 01:43 PM
Last Updated : 09 Apr 2020 01:43 PM

ஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட விவசாயப் பணிகள் எவையெவை? - மத்திய அரசு பட்டியல்

புதுடெல்லி

மாநில விவசாயத்துறை அமைச்சர்களுடன் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஊடரங்கு காலத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

விதைப்பு நடவடிக்கைகள் மற்றும் அறுவடை, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் சந்தை (மண்டி) செயல்பாடுகள் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்தல், விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருள்கள் வழங்குதல், பொருள்கள் சேமிப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், விவசாயம் மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருட்களை வெளியில் கொண்டு செல்வது தொடர்பான விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஊரடங்கு காலத்தில் விவசாயம் தொடர்பான பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்குகள் பற்றி மீண்டும் ஒருமுறை தெரிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

* வேளாண் விளைபொருட்கள் கொள்முதலில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள், குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதல் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்;

* விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலங்களில் மேற்கொள்ளும் விவசாயப் பணிகள்;

* வேளாண் கொள்முதல் மார்க்கெட் கமிட்டியால் நிர்வகிக்கப்படும் அல்லது மாநில அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைகள் (மண்டிகள்);

* மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் ஆதரவுடன், விவசாயிகள் / விவசாயக் குழுக்கள், எப்.பி.ஓ.க்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவர்களிடம் இருந்து, நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள சந்தைகள் (மண்டிகள்);

* விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்கும் கடைகள்;

* விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் பிரிவுகள்;

* வேளாண் இயந்திரங்கள் தொடர்பான சி.எச்.சி. மையங்கள்;

* ஒருங்கிணைந்த அறுவடை கருவி மற்றும் இதர வேளாண்மை/ தோட்டக்கலை சாதனங்கள் போன்ற அறுவடை மற்றும் விதைப்பு தொடர்பான இயந்திரங்களை மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் கொண்டு செல்தல்;

* குளிர்பதனக் கிடங்கு மற்றும் பொருள் சேமிப்புக் கிடங்கு சேவைகள்;

* உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான பொருட்கள் தயாரிக்கும் பிரிவுகள்;

* அத்தியாவசிய சரக்குகள் போக்குவரத்து;

* வேளாண் இயந்திரங்கள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் (வழங்கல் சங்கிலித் தொடர் உள்பட) மற்றும் பழுதுநீக்க கடைகள்;

* தேயிலை தொழிற்சாலை, தேயிலைத் தோட்டம் உள்பட, அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்களுக்கு விலக்கு

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய சரக்குகள் வழங்கல் சங்கிலித் தொடர் சேவையில் தேசிய அளவில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் / அமைப்புகளுக்கு, தேசிய அளவில் வழங்கல் பணியைத் தொடர்வதற்கு தேவையான அலுவலர்கள், தொழிலாளர்கள் எளிதில் பயணம் செய்ய மாநில அளவில் அனுமதிக்கும் வகையில் அத்தாட்சிக் கடிதங்கள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய விவசாயத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x