Published : 27 Aug 2015 10:20 AM
Last Updated : 27 Aug 2015 10:20 AM

இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு

செவ்வாய்க் கிழமை சிறிதளவு உயர்ந்த பங்குச்சந்தை நேற்று மீண்டும் சரிந்து முடிந்தது. செவ்வாய் அன்று சீனா மத்திய வங்கி வட்டி குறைப்பு செய்தது. அந்த வட்டி குறைப்பு முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தவில்லை. இந்த வட்டி குறைப்பு பொருளாதார மந்த நிலையை மேம்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கவில்லை. தவிர எப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இன்று இருப்பதாலும் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.

சென்செக்ஸ் 317 புள்ளிகள் சரிந்து 25714 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 88.85 புள்ளிகள் சரிந்து 7791 புள்ளியில் முடிவடைந்தது. சீனா பங்குச்சந்தை குறியீடான ஷாங்காய் காம்போசிட் குறியீடு 1.27 சதவீமும், ஹாங்செங் 1.52 சதவீதமும் சரிந்து முடிந்தன. ஷாங்காய் காம்போசிட் குறியீடு கடந்த ஆறு வர்த்தக தினங்களில் 22 சதவீதம் சரிந்திருக்கிறது.

இந்திய பங்குச்சந்தையில் துறை வாரியாக பார்க்கும்போது வங்கித்துறை குறியீடு அதிகமாக (1.68%) சரிந்தது. அதனை தொடர்ந்து ஹெல்த்கேர் (1.14%), டெக்னாலஜி(1.04%) சரிந்து முடிந்தது. மாறாக மின் துறை குறியீடு 1.64 சதவீதமும், மெட்டல் குறியீடு 0.23 சதவீதமும் உயர்ந்து முடிந்தன். அதேபோல மிட்கேப் குறியீடு சிறிதளவு சரிந்தும், ஸ்மால்கேப் குறியீடு சிறிதளவு உயர்ந்தும் முடிவடைந்துள்ளது.

சென்செக்ஸ் பட்டியலில் பி.ஹெச்.இ.எல்., டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ மற்றும் கோல் இந்தியா ஆகிய பங்குகள் விலை உயர்ந்து, ஹெச்டிஎப்சி, ஹீரோமோட்டோ கார்ப், எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தும் முடிந்தன.

முதலீட்டாளர்கள் இப்போது குழப்பம் அடைந்திருக்கிறார்கள், அவர்களுடைய நம்பிக்கை தகர்ந்திருக்கிறது.

பெரிய பூகம்பத்துக்கு பிறகு, அடிக்கடி நில அதிர்வு இருப்பதை போல, திங்கள் கிழமை நடந்த சரிவின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று இகினோமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத் தில் ரூ.2,080 கோடி அளவுக்கு பங்குகளை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்றிருக் கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x