Published : 29 Aug 2015 10:54 AM
Last Updated : 29 Aug 2015 10:54 AM

தொழில் ரகசியம்: மார்க்கெட்டை உயர்த்தும் மஸ்கட்

பாத்ரூமில் `ஆண்’ என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும் கதவில் ஆண் முகம் அல்லது சீட்டுக்கட்டு ராஜா படத்தை பார்த்து ஆண்கள் பாத்ரூம் என்று உறுதி செய்துகொண்டே நுழைகிறோம். டபுள் டிகிரியே வாங்கியிருந்தாலும் படித்துப் பார்த்து நுழைவதை விட உருவத்தைப் பார்த்து நுழைவதே பெட்டர் என்று நினைக்கிறோம்.

இந்த உருவ மேட்டர் பாத்ரூம்களுக்கு மட்டுமல்ல, பிராண்டிங்கிற்கும் பொருந் தும்! என்னதான் அழகாய் பிராண்டை உருவாக்கி, ஆழமாய் பொசிஷனிங் செய்து அமோகமாய் விளம்பரப் படுத்தினாலும் அதற்கு உருவம் கொடுத்து விளக்கும் போது, விளம்பரப்படுத்தும் போது பிராண்ட் வாடிக்கையாளரை எளிதாகச் சென்றடைகிறது. பிராண்ட் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது.

`அமுல்’ விளம்பரத்தில் வரும் சின்ன பெண்ணைப் பார்த்திருப்பீர்கள். அதே போல் ‘பூமர்’ பபுள் கம் விளம்பரங்களில் நீல கலர் சூப்பர்மேன் போன்ற உருவத்தைப் பார்த்திருப்பீர்கள். ’சன்ஃபீஸ்ட்’ பிஸ்கெட்டுகள் ‘சன்னி’ என்ற எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் சூரியனை பார்த்திருப்பீர்கள். இந்த உருவங்களுக்கு பிராண்ட் மஸ்கட்’ என்று பெயர்.

பிராண்டிற்கு அழகு, கலர், இமேஜ் கொடுப்பவை இவை. மக்களை கவர்ந்து, பிராண்டை பார்க்கத் தூண்டி, எப்பொழுதும் நினைவில் வைக்க பிராண்ட் மஸ்கட் உதவும். மனித, மிருக அல்லது வேறு உருவங்களில் அமைக்கப்படும் இவ்வகை மஸ்கட் டுகள் வாடிக்கையாளர்களை வசீகரித்து பிராண்டிற்கு ஒரு புதிய பரிமாணத்தை தருகிறது.

உருவம், படம், பொம்மை என்பதால் மஸ்கட் குழந்தைகள் பிராண்டிற்குத் தான் போலிருக்கிறது என்று குழந்தைத்தனமாய் நினைத்து விடாதீர்கள். சகலருக்கும் சப்ஜாடாய் பயன் தரும் வல்லமை படைத்தவை மஸ்கட்டுகள். மனித பிராண்டுகளை விடுங்கள், மாட்டுத்தீவன பிராண்டிற்குக் கூட மஸ்கட் உருவாக்கலாம். உருவாக்கி யிருக்கிறார்கள். மதுரைச் சேர்ந்த ‘வைகை அனிமல் நியூட்ரிஷன்’ என்ற கம்பெனி ‘தான்யா’ என்ற மாடுகளுக்கான ஸ்பெஷல் தானிய தீவனத்திற்கு அழகான ஒரு மாட்டையே மஸ்கட்டாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பயனடைந் திருக்கிறார்கள்!

பிராண்ட் மஸ்கட் என்ன செய்யும்?

ஒழுங்காய் பயன்படுத்தினால் என்னென்னமோ செய்யும். ஏராளமான பயன் தரும். ஏகோபித்த ஆதரவு கொடுக்கும். சாம்பிளுக்கு சில சிறப்புகளைப் பார்ப்போம்.

பிராண்ட் பயனை உருவகப்படுத்த மஸ்கட் பயன்படும். ‘ஏர் இந்தியா’ விமான சர்வீஸ் மஹாராஜா பொம்மையை தன் மஸ்கட்டாக உபயோகிக்கிறது. ‘ஏர் இந்தியாவில் பயணித்தால் மஹாராஜா போல் பாவித்து, மரியாதை செய்து, அன்பாய் உபசரிப்போம்’ என்று தலை குனிந்து சொல்லாமல் சொல்கிறார் மஹாராஜா!

‘பில்ஸ்பரி’ கோதுமை விளம்பரங் களில் கொழு கொழுவென்று ஒரு வெள்ளை கலர் பொம்மையை பார்த்திருப்பீர்கள். அந்த மஸ்கட்டிற்கு ‘டோ பாய்’ என்று பெயர். எங்கள் கோதுமையை வாங்கிச் சமைத்தால் சப்பாத்தியும், பூரியும் கும்மென்று உப்பி ஜம்மென்று இருக்கும் என்று வாய் திறந்து சொல்லாமல் தன் கொழுக் மொழுக் உருவம் கொண்டு ஜோராய் சொல்கிறான் டோ பாய்!

வாடிக்கையாளரோடு ஒரு ஆத்மார்த்த உறவை வளர்க்கவும் மஸ்கட் உதவும். ’மெக்டோனால்ட்ஸ்’ பிராண்டின் மஸ்கட்டை பார்த்திருப்பீர்கள். மஞ்சள், சிவப்பு டிரஸ் அணித்து சர்க்கஸ் கோமாளி போல் குழந்தைகளைக் கவரும் வண்ணம் இருக்கும் அந்த மஸ்கட்டிற்கு ’ரொனால்ட் மெக்டானல்ட்’ என்று பெயரே வைத்திருக்கிறார்கள். குடும்பத்தோடு, குழந்தைகளோடு எங்கள் ஃபாஸ்ட் ஃபுட் சென்டருக்கு வாருங்கள்; குதூகலத்துடன் குஷியாய் இருந்துவிட்டு போங்கள் என்று மனதை தொடும் வகையில் கூறுகிறான் ரொனால்ட்.

சில சமயங்களில் பிராண்டிற்கு ஒரு ஆளுமையை, ஒரு பர்சனாலிடியை தரவும் மஸ்கட் பயன்படும். ‘ஆப்பி’ ஆப்பிள் ஜூஸ் இளைஞர்களைக் கவரும் எண்ணத்தில் தங்கள் பாட்டில் ஷேப்பிலேயே மஸ்கட் அமைத்து ஆப்பி ஃபிஸ் என்ற இவன் உங்களைப் போல் ஒரு கூலான நண்பன், உங்கள் செட்டில் அவனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விளம்பரப்படுத்துகிறது.

பெருகி வரும் போட்டி உலகில், சின்ன பிராண்டாக இருந்தாலும், பெரிய பிராண்டுகளோடு மல்லு கட்டி மாரடிக்கவும், வாடிக்கையாளர் மனதில் சட்டென்று புகுந்து பட்னென்று படரவும் மஸ்கட் மலை போல் உதவும். வெள்ளைக் கலரில் தத்தக்கா பித்தக்கா என்று நடந்து சென்று கேக்கே பிக்கே என்று பேசும் ‘சூசூ’ (Zoozoo) உருவங்கள் எந்த பிராண்டின் மஸ்கட் என்று நான் தனியாய் சொல்லவேண்டுமா என்ன. அல்லது ஆஜானுபாக ஆண் மகன் உருவம் கொண்ட ஒருவன் தலைக்கு மேல் டயரை தூக்கி பிடித்திருப்பது எந்த டயர் பிராண்டின் விளம்பரம் என்பது தான் உங்களுக்கு தெரியாதா!

பிராண்டை பிரபலப்படுத்த பயன் படும் சினிமா நட்சத்திரங்களுக்கு வயதாகலாம். ஆனால் மஸ்கட் சாஸ்வ தமானவை. மார்கண்டேய மகத்துவம் பெற்றவை. என்றுமே வயதாகாத வசீகரங்கள் மஸ்கட்கள். அமுல் 1967 முதல் அந்த சின்னப் பெண்ணை மஸ்கட்டாக உபயோகிக்கிறது. இன்றும் அந்த சின்னப் பெண்ணின் குறும்புப் பார்வை அலுக்கிறதா நமக்கு? ’பார்லே ஜி’ பிஸ்கட் பாக்கெட்டுகளில் கல்லம் கபடமில்லாத அந்த சின்ன பெண்ணின் முகம் தான் போரடிக்கிறதா? உங்கள் வீட்டிலுள்ள வயதானவர்களை கேட்டுப் பாருங்கள். அறுபதுகளில் ‘மர்ஃபி’ ரேடியோ விளம்பரங்களில் இருந்த ஒரு சுட்டிக் குழந்தையின் அழகு என்றாவது அலுப்பு தட்டியதா என்று!

மருந்துகள், வங்கி, ஆயுள் காப்பீடு போன்றவை சீரியசான பொருள் பிரிவுகள். அதன் பிராண்டுகள் வாடிக்கை யாளர்களுக்கு ஒருவித பய உணர்ச்சியை தரும். அந்த பொருள் பிரிவுகளிலுள்ள பிராண்டுகளோடு வாடிக்கையாளர்களூக்கு நெருக்கத்தை உருவாக்குவது சிரமம். அது போன்ற சமயங்களில் சரியாக தேர்ந்தெடுக்கும் மஸ்கட் பிராண்டிற்கு ஒரு ஃபன் இமேஜ் கொடுத்து வாடிக்கையாளரோடு நெருக்கத்தை உருவாக்க உதவும். ‘மெட் லைஃப்’ ஆயுள் காப்பீடு கம்பெனி ‘பீனட்’ என்ற பிரபல கார்டூன் கதாபாத்திரத்தை தன் மஸ்கட்டாக பயன்படுத்துகிறது. இறப்பு, விபத்து என்று பயமுறுத்தும் ஆயுள் காப்பீடு விஷயத்தை எளிமையாக, மனதை தொடும் வகையில் மக்களுக்கு விளக்குகிறது இந்த க்யூட்டான மஸ்கட்.

மஸ்கட் பயன்படுத்துவது பெரிய தல்ல; அனைவருக்கும் புரியவேண்டும். யார் மனதையும் புண்படுத்தாதபடி அமைப்பதும் முக்கியம். ’ஓனிடா’ பிசாசை மஸ்கட்டாக பல காலம் பயன் படுத்தியது. அந்த பூச்சாண்டி நம்மை பயமுறுத்தியதா? இல்லையே. ஒனிடாவை வாங்கினால் அண்டை வீட்டுக்காரர்கள் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள் என்பதை பொறாமையின் உருவமான பிசாசை கொண்டு விளக்கிய அற்புத மார்க் கெட்டிங் டெக்னிக் அல்லவா அது!

பிராண்ட் மஸ்கட்டை அடிக்கடி மாற்றக்கூடாது. ’கெல்லாக்ஸ்’ தன் பேக்கேஜிங் முதல் விளம்பரங்கள் வரை ‘டோனி’ என்ற புலியை பல ஆண்டு காலமாய் பயன்படுத்தி வருவதைப் பார்த்திருப்பீர்கள். ’கேஎஃப்சி’ ஆரம் பித்த ‘கல்னல் சாண்டர்ஸ்’ படத்தையே தன் மஸ்கட்டாக அந்த பிராண்ட் கோழி தோன்றிய காலத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறது.

அதே போல் மஸ்கட்டை பிராண்ட் விற்பனை மேம்பாட்டு செயல்கள் அனைத்திலும் முழுமையாய் பயன்படுத்தவேண்டும். கடனுக்கேனும் ஒரு உருவத்தை உருவாக்கி ஒப்புக்கு சில முறை உபயோகித்து எங்க வீட்டுக்காரரும் கச்சேரி போனார் என்பது போல் இருந்து பின் பிராண்ட் விற்கவில்லை என்று புலம்பிப் பிரயோஜனமில்லை. மெக்டானல்ட்ஸ் தன் மஸ்கட்டை எல்லா செண்டர்களிலும், விளம்பரங்களிலும் உபயோகித்து வருகிறது. இன்றல்ல, நேற்றல்ல, ஐம்பது வருடங்களாக. இங்கல்ல, அங்கல்ல, நூற்றுக்கும் அதிகமான நாடுகளில். ஒன்றல்ல இரண்டல்ல. தங்களது 34,000 த்துக்கும் அதிகான சென்டர்களில்!

நல்ல பிராண்ட் வாடிக்கையாளர்களுக்கு தானாகவே தன்னை காட்டும். அதோடு நல்ல மஸ்கட் ஒன்றையும் வடிவமைத்துவிட்டால் மொத்த மார்க்கெட்டையும் காட்டு காட்டு என்று காட்டிவிடும்!

satheeshkrishnamurthy@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

 
x