Published : 16 Aug 2015 11:30 AM
Last Updated : 16 Aug 2015 11:30 AM

வணிக நூலகம்: எண்ணம்... செயல்பாடு... வெற்றி!

அமெரிக்காவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அங்குள்ள சுமார் அறுநூறு மாணவர்களிடம் “நீங்கள் சந்திக்கும் மிகக் கடினமான பிரச்சினை என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. தங்களிடம் போதிய சுயநம்பிக்கை இல்லை என்ற பதிலே கிட்டத்தட்ட எழுபத்தைந்து சதவீத மாணவர்களிடமிருந்து கிடைத்திருக்கின்றது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இந்த நிலையென்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இளைய சமுதாயத்தின் நிலை என்ன?

இன்றைய தேவை!

இளமையில் ஏற்படும் அவநம்பிக்கை போன்ற கொடுமையான நிலை வேறு எதுவுமில்லை என்பது அமெரிக்க தத்துவவாதியும் நகைச்சுவையாளருமான மார்க் டுவைன் அவர்களின் கூற்று. இதுவே இன்று நம்முன் இருக்கும் உண்மையான சவால் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சி.எஸ்.மிஸ்ரா. இந்த சவாலானது, எவ்வாறு இன்றைய இளைஞர்களிடம் நம்பிக்கையினை விதைப்பது?, எதிர்மறை அணுகுமுறையிலிருந்து நேர்மறை அணுகுமுறையாக எவ்வாறு மாற்றுவது?, அவர்களுடைய வெளிப்புற பார்வையினை எப்படி அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கையானதாக மாற்றுவது? என்பனவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. வெற்றிக்கான வழி, முயற்சி மற்றும் செய்யும் பிழைகளில் இருந்தே கிடைக்கின்றது. ஆக, சந்தேகமேயில்லாமல் இது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் முடியாதது அல்ல.

எது வெற்றி!

ஏன் சிலர் மட்டும் மிகப்பெரிய வெற்றிகளையும், மற்றவர்கள் தோல்வியினையும் அடைகிறார்கள்?. ஏன் சிலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் இருக்கின்றார்கள்?. ஏன் சிலர் வசதியான வீடுகளிலும், மற்றவர்கள் சிறிய, குறைந்த வசதியுடைய அல்லது குடிசை வீடுகளிலும் வாழ்கிறார்கள்?. சிலர் மரியாதையாகவும் மற்றும் சிலரோ கண்ணியக்குறைவாகவும் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன?. இதற்கெல்லாம் காரணம், அந்த சிலரின் கடின உழைப்போ அல்லது அதிர்ஷ்டமோ எதுவானாலும் இன்று வெற்றி அவர்கள் கையில். இதில், வெற்றி என்ற ஒன்று எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? அல்லது வெற்றி என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக வெற்றி என்பது “பணமே” என்ற கருத்தே பரவலாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் வெற்றியினைப்பற்றி பேசுவது, அதிகப்படியான பணம், அதிகப்படியான வளர்ச்சி, அதிகப்படியான செழுமை போன்றவை பற்றியே. உண்மையில், பணம் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய காரணி அல்ல என்கிறார் ஆசிரியர். ஆனால், நாம் வெற்றிபெறும்போது பணம் நம்மை துரத்தி வருகின்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். உதாரணமாக தொழிலதிபர், நடிகர், இசைக்கலைஞர் அல்லது விளையாட்டு வீரரை எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைய அம்பானி சகோதரர்கள், அமிதாப்பச்சன், லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் தங்களுடைய துறைகளில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தவர்கள். அந்த வெற்றியால்தான் அவர்கள் பணக்காரர்களே தவிர, பணக்காரர்களாக இருந்ததனால் அவர்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துவிடவில்லை. பணம் எப்போதும் வெற்றியின் துணைபொருள் மட்டுமே.

முடிவில்லா வெற்றி!

வெற்றிக்கு ஒருபோதும் முடிவு இல்லை ஏனென்றால் அது ஒரு செயல்முறை என்கிறார் ஆசிரியர். மேலும், வெற்றியானது நாம் சென்றடையும் இடமோ அல்லது இலக்கோ அல்ல, அது ஓரு பயணம் என்கிறார். ஒரு குறிப்பிட்ட செயலில் வெற்றி கிடைக்கும்போது, நாம் அடுத்த செயலுக்கான திட்டத்திற்கு தயாராகிவிடுகிறோம். தேர்வில் வெற்றிபெற்று பட்டம் பெரும் மாணவர் ஒருவர், அடுத்ததாக தனது வாழ்க்கைக்கான திட்டத்தில் இறங்கிவிடுகிறார். ஆக, வெற்றியானது ஒருபோதும் முடிந்துவிடக்கூடிய செயல் அல்ல, மாறாக அது ஒரு தொடர்ச்சியான வாழ்க்கைச் செயல்பாடு என்பதே ஆசிரியரின் கூற்றாக இருக்கின்றது.

எண்ணமும் கற்பனையும்!

ஒரு செயல்பாட்டிற்கோ அல்லது அந்த செயலின்மூலம் கிடைக்கும் வெற்றிக்கோ அடிப்படை காரணியாக விளங்குவது நமது எண்ணங்களும் கற்பனையுமே. இவையே வெற்றிக்கான விதைகள் என்கிறார் ஆசிரியர். உங்களால் தைரியமாக கற்பனை செய்யவும் அதற்கான நினைவும் இருந்தால், உங்களிடம் வெற்றி பெறுவதற்கான தைரியமும் உள்ளதாகவே அர்த்தம். ஒரு செடியின் விதை ஒன்றினை எடுத்து நட்டு, தினமும் நீர் ஊற்றி வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது நாளடைவில் வளர்ந்து ஒருநாள் முற்றிலும் நன்கு வளர்ந்த செடியாக உங்களுக்கு கிடைக்கும் அல்லவா!. இதுவே நமது எண்ணங்களுக்கும் கற்பனைக்கும் சமமானதாக உள்ளது. அதாவது, ஒரு திட்டத்தை செயல்படுத்த தேவையான யோசனையை வைத்துள்ளீர்கள். அதை உங்கள் மனதில் நட்டு, விதைக்கு நீர் ஊற்றுவதுபோல் தொடர்ந்து உங்களுக்குள்ளே நினைவுபடுத்திக்கொண்டே இருங்கள். மேலும், என்னால் முடியும், நான் செய்வேன் என்ற எண்ணமும் உங்களுக்குள்ளே இருக்க, ஒரு நாள் வெற்றி உங்கள் வசப்படும்.

அணுகுமுறையில் மாற்றம்!

உங்கள் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றத்தின்மூலமே, உங்களுக்கான அனைத்து நிலைகளிலும் மாற்றத்தைக் காண முடியும். வெற்றி மற்றும் சாதனைகளுக்கான எண்பத்தைந்து சதவீத காரணங்கள் அணுகுமுறையே என்கிறது புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று. உங்களின் கல்வி தகுதியோ அல்லது தொழில்நுட்ப அறிவோ உங்களது செயல்பாட்டின் ஆரம்ப நிலையில் மட்டுமே உங்களுக்கு உதவியாக அமையும். அடுத்தடுத்த செயல் முன்னேற்றங்களுக்கு பெரிதும் உதவுவது உங்களின் அணுகுமுறையே. அணுகுமுறையைப் பொருத்தே உங்கள் செயல்பாட்டின் எதிர்காலம் உள்ளது.

அணுகுமுறை அல்லது மனப்பாங்கின் இரண்டு வகைகளைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். ஒன்று “நேர்மறை மனப்பாங்கு” மற்றொன்று “எதிர்மறை மனப்பாங்கு”. இதில், நேர்மறையான அணுகுமுறையினை உடையவர்களையே இந்த உலகம் பெரிதும் விரும்புகின்றது. மேலும், அவர்களுக்கே வெற்றிக்கான வாய்ப்பும் அதிகம். மிகப்பெரிய வெற்றியடைந்த பல வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு பொதுவான பண்பு இந்த நேர்மறை அணுகுமுறையே.

நேர்மறை மனப்பாங்கினை உடையவர்கள் எப்போதும் தீர்வின் பக்கமும், எதிர்மறை மனப்பாங்கினை உடையவர்கள் எப்போதும் சிக்கல்களின் பக்கமும் இருக்கின்றார்கள். நேர்மறை மனப்பாங்கினை உடையவர்களின் மனநிலையானது “கடினமானதாக இருக்கலாம் ஆனால் சாத்தியமானது” என்பதாகவும், எதிர்மறை மனப்பாங்கினை உடையவர்களின் மனநிலையானது “சாத்தியமானதாக இருக்கலாம் ஆனால் மிகவும் கடினமானது” என்பதாகவும் இருப்பதாக சொல்கிறார் ஆசிரியர்.

இயற்கை சொல்லும் பாடம்!

மூங்கில் மரத்திற்காக விதைக்கப்பட்டு நீருற்றி உரமிட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதன் வளர்ச்சியில் முதல் நான்கு வருடத்தில் ஒன்றும் முன்னேற்றமில்லை. ஆனால் அதன் ஐந்தாவது வருடத்தின் சில நாட்களில் வேகமான வளர்ச்சியினைக் காட்டுகிறது. ஆறே வாரங்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு அடி வளர்கிறது அந்த மூங்கில்.

மூங்கில் வளர ஆறு வாரங்களே தேவைப்பட்டதா? அல்லது மொத்தமாக ஐந்து வருடங்கள் தேவைப்பட்டதா? என்பதே நமக்குள்ள கேள்வி. அதன் வளர்ச்சிக்கு ஐந்து வருடங்களுமே தேவைப்பட்டது என்பதே உண்மை அல்லவா!. ஒருவேளை பொறுமையிழந்து அந்த மூங்கிலுக்கான கண்காணிப்பை பாதியில் நிறுத்தியிருந்தால், அதன் வளர்ச்சி கிடைத்திருக்காது அல்லவா! அதுபோலவே, வெற்றியை நோக்கிய பாதையில் பொறுமையுடனும் நம்பிக்கை யுடனும் நமது செயல்களை செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.

தீர்வு நம் கண்களுக்கு உடனே தெரியாவிட்டாலும், வெற்றிக்கான வளர்ச்சி நமது தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலமாக நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இறுதியில் வெற்றியும் வசமாகும்.

மனதை வலுப்படுத்த உதவும் சுயநம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் மற்றும் அதனோடு சேர்ந்த அணுகுமுறை போன்றவையும், வெற்றி பற்றிய தெளிவான புரிதலும் இருந்துவிட்டால் எதையும் எட்டிப்பிடிக்க முடியும் என்பதே நாம் அறியும் பாடம்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x