

தமிழகத்தைச் சேர்ந்த இரு சக்கரம் மற்றும் ஆட்டோ தயாரிக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தனது ஆலைகளை மார்ச் 31 வரை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள உற்பத்திஆலைகள் மட்டுமின்றி இந்தோனேசியாவில் உள்ள ஆலையையும் மூடுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவன ஊழியர்களின் ஊதியம், வேலை எதுவும் இதனால் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுடன் இது தொடர்பாக ஆலோசித்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
சுஸுகி
குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி மோட்டார் குஜராத் ஆலைமார்ச் 31-ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே மார்ச் 25 வரை மூடுவதாக இந்நிறுவனம் அறிவித்திருந்தது. மாநில அரசு மார்ச் 31 வரை ஊரடங்கு அமல்படுத்தியுள்ள சூழலில் ஆலையை மார்ச் 31-ம் தேதி வரை மூடுவதாக அறிவித்துள்ளது. இங்கு சுஸுகி மோட்டார் குஜராத் (எஸ்எம்ஜி) என்ற பெயரில் ஆலை செயல்படுகிறது. இந்நிறுவனம் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு கார்களை தயாரித்து அளிக்கிறது.
டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ்
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் மார்ச் 31வரை தனது ஆலையில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கம்ப்யூட்டர் கீ போர்டு,தெர்மல் பிரிண்டர், டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. நிறுவன உற்பத்தி ஆலை மற்றும் அலுவலகங்களும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.