

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையை போக்குவதற்கு நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது அவசியம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் வலியுறுத்தியுள்ளார். கரோனா வைரஸ்பாதிப்பு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் ஒரு சதவீத அளவுக்குக் குறையும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஏற்கெனவே இந்தியாவின் பேரியல் பொருளாதார சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது கரோனா வைரஸ்பாதிப்பு நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது என்ற அவர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உள்ளது என்றார். ஆனால் இந்தியாவின் வளர்ச்சி மட்டுமின்றி வேலை வாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் பொருளா தாரத்தை முடுக்கிவிடுவதற்கு நிதி சலுகைகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றார். இதுபோன்ற சூழலில் நிதிப் பற்றாக்குறை இலக்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை நாட்டின் பாதுகாப்பு சார்ந்து பிரச்சினை உருவானால் எப்படி கூடுதல் நிதியை அரசு ஒதுக்குமோ அதைப் போன்று இப்போதும் ஒதுக்க வேண்டும் என்றார். இதுபோன்ற சூழலில் அரசு நிதி சலுகை அறிவித்து அதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை 0.5 சதவீத அளவுக்கு அதிகரித்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றார். தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய சூழலில் பேரியல் பொருளாதார நிலை மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது, கடன் வழங்கும் விகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக முதலீடுகளும் குறைந்துள்ளன என்றார் ஜலான்.
கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஏற்பட்டுள்ளது என்ற போதிலும் இதற்கு முன்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
2019-20-ம் நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதஅளவுக்கு இருக்கும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டது. தற்போதைய சூழலில் இது மேலும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றார்.
ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுத்து பணப்புழக் கத்துக்கு வழிவகுக்குமா என்றுகேட்டதற்கு, ரிசர்வ் வங்கி ஏற்கெனவே இத்தகைய நடவடிக்கை களை எடுத்துவிட்டது என்றார்.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி சலுகை அறிவிக்க வேண்டும் என தொழில்துறையினர் அரசை வலியறுத்தியுள்ளனர். வரிச் சலுகை, வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே கோடிக்கணக்கில் நிதி சலுகைகளை அறிவித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.