

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா மகாராஷ்டிர மாநிலத்தில் தனது பணிகளை நாளை முதல் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவுதை பொறுத்தவரையில் மகாராஷ்டிர மாநிலம் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவாமல் தடுக்க தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைக்கவும், தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா மகாராஷ்டிர மாநிலத்தில் தனது பணிகளை நாளை முதல் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
புனேயில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையில் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படுகிறது. அதுபோலவே நாக்பூர், மும்பை உட்பட முக்கிய நகரங்களில் தொழிற்சாலை, விற்பனை மையங்கள், சேவை பிரிவுகள் என அனைத்தையும் நாளை முதல் மூடிவிடுமாறு மகேந்திரா நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எப்போது மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கவில்லை. அடுத்தகட்ட நகர்வை தொடர்ந்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.