Published : 21 Mar 2020 09:02 AM
Last Updated : 21 Mar 2020 09:02 AM

யெஸ் வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய வாய்ப்பு

புதுடெல்லி

திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கியை மீட்டெடுக்கும் விதமாக எஸ்பிஐ உள்ளிட்ட ஏழு இந்திய வங்கிகள் முதலீடு மேற்கொண்டுள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

யெஸ் வங்கி அதன் நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை அறிவித்த பிறகு, இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கார்லைல், கனடா புரூக்ஃபீல்ட், டில்டன் பார்க் கேபிடல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் யெஸ் வங்கியில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கியை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடி தேவையாக இருந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி உட்பட ஏழு முன்னணி வங்கிகள் யெஸ் வங்கியில் ரூ.10,000 கோடி அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளன.

எஸ்பிஐ ரூ.6,050 கோடி முதலீடு செய்துள்ளது. இதுதவிர ஐசிஐசிஐ வங்கியும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் தலா ரூ.1,000 கோடி முதலீடு செய்துள்ளன. மேலும் ஆக்ஸிஸ் வங்கி ரூ.600 கோடியும், கோடக் மஹிந்திரா வங்கி ரூ.500 கோடியும் முதலீடு செய்துள்ளன.

பந்தன் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கி இரண்டும் தலா ரூ.300 கோடியும் முதலீடு செய்துள்ளன. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ரூ.250 கோடி முதலீடு செய்துள்ளது.

யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஏப்ரல்-3 வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000-க்குமேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.இந்நிலையில் இக்கட்டுப்பாடுகள் மார்ச் 18 விலக்கப்பட்டு வங்கி வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x