

வருமான வரித்துறை அதிகாரிகள் நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் ரூ.1,051 கோடி சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர். இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், மொத்தம் 893 இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். 2018-19-ம் நிதி ஆண்டில் மொத்தம் நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 983 என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரித்துறை அதிகாரிகள் வரிஏய்ப்பு தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர் என்றும், இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், இவை அனைத்துமே வழக்கமான நடைமுறைகள்தான் என்றார்.
வரி ஏய்ப்பு தொடர்பான தகவல் கிடைத்தவுடன் வரித்துறையினர் இதுபோன்று சோதனை மேற்கொண்டு சொத்துகளை பறிமுதல்செய்வதாக அவர் கூறினார். சோதனை நடத்துவது, சொத்துகளை பறிமுதல் செய்து அவற்றை ஒப்படைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்துமே வழக்கமான நடைமுறைகள்தான் என்றார்.
வருமான வரித்துறை சோதனைகள் அனைத்துமே சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடத்தப்படுவதாக அவர் கூறினார். ஒவ்வொரு வழக்குகளிலும் அவற்றின் மீதான தன்மை, சூழ்நிலை, வரி ஏய்ப்பு அளவு இவற்றின் அடிப்படையில் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சொத்துகளை பறிமுதல் செய்யும்போது அவற்றை மதிப்பீடு செய்து, உரிய வரியை வசூலிப்பது, வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருந்தால் அதற்குரிய அபராதத் தொகையை வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் சட்ட ரீதியில்நடவடிக்கை எடுக்க வசதியாக வழக்கு பதிவு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
வரித்துறை அதிகாரிகளின் மதிப்பீடு ஆகிய நடவடிக்கைகள் குறித்து மேல் முறையீடுசெய்வதற்கான சட்டரீதியிலானவசதிகளும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். நிர்வாகரீதியில் இது குறித்து வருமான வரித்துறை (குறைதீர்) ஆணையரிடம் முறையிடலாம். அல்லது வருமான வரித்துறை தீர்ப்பாயத்திடமோ அல்லது உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றங்களில் முறையீடு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் வருமான வரி சட்டம் 1961-ன்படி பிரிவு 138-ன்கீழ்தொடரப்பட்ட வழக்கு விவரங்களை வெளியிட தடை உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
நிறுவனங்கள் மசோதா அறிமுகம்
நிறுவனங்கள் சட்டம் 2013-ல்திருத்தங்கள் செய்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரினாமூல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்புதெரிவித்தனர். இந்த மசோதாவை மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் தாக்கல் செய்தார்.
ஆனால் தற்போது யெஸ்வங்கியில் பிரச்சினை தீவிரமடைந்துள்ள சூழலில் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த சட்ட மசோதா உள்ளதாக பல உறுப்பினர்கள் கருத்துதெரிவித்ததோடு இதைநிதித்துறைக்கான நாடாளுமன்றநிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று குறிப்பிட்டனர்.
இந்த மசோதா நிறுவனங்களில் நடைபெறும் குற்ற செயல்களை நீக்கி, வெறும் அபராதம் விதிக்க வழி வகை செய்வதாக பிஜூ ஜனதா தள உறுப்பினர் பர்துராஹி மஹ்தாப் குற்றம் சாட்டினார். மிகப் பெரிய தனியார் வங்கி திவாலான சூழல் உருவாகியுள்ள தருணத்தில் இந்த மசோதா அவசியம்தானா என்று அவர் கேள்வியெழுப்பினார்.
தொழில் கூட்டமைப்புகளின் கோரிக்கைகளை மட்டுமே ஏற்று நிறுவனங்களுக்கு சாதகமாக இத்தகைய திருத்தங்களை அரசுகொண்டு வந்துள்ளதாக திரினமூல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதா ராய் குற்றம் சாட்டினார். தொழில் புரிவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக நிறுவன குற்றங்கள் புரிவோரை காக்கும் வகையில் திருத்தம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசு நிறுவனங்களுக்காக, நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கானது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மசோதா உள்ளதாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றம் சாட்டினார். நிறுவனங்களுக்கு உள்ள சமூக பொறுப்புணர்வை (சிஎஸ்ஆர்) தட்டிக் கழிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குற்றம் புரிவோரை தப்பிக்க வழிவகுக்கும் வகையில் மசோதா இல்லை என்று உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார் அனுராக் தாகுர். சிஎஸ்ஆர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை என்றும் அதை நிர்வாக ரீதியில் உரிய வழிகாட்டுதலோடு நடத்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தின் (என்சிஎல்டி) பணிகளை வெகுவாகக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.