Published : 17 Mar 2020 08:15 AM
Last Updated : 17 Mar 2020 08:15 AM

யெஸ் வங்கி விவகாரத்தில் அனில் அம்பானிக்கு சம்மன்- அமலாக்கத் துறை நடவடிக்கை

நிதி நெருக்கடியால் திவால் ஆகும் நிலைக்கு ஆளான யெஸ் வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட நிதி மோசடிகளை அமலாக்கத் துறை தீவிரமாக விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில் யெஸ் வங்கி மோசடிகளில் அனில் அம்பானிக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சந்தேகத்தின் பொருட்டு அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மார்ச் 6-ம் தேதி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யெஸ் வங்கி அதிக கடன் வழங்கி திரும்பத் தராமல் உள்ள நிறுவனங்கள் பட்டியலில் அனில் அம்பானி குழுமம், எஸ்ஸெல், ஐஎல் அண்ட் எஃப் எஸ்,டிஹெச்எஃப்எல் மற்றும் வோடஃபோன் ஆகியவை இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். யெஸ் வங்கிவிவகாரத்தில் இந்த நிறுவனங்களின் புரொமோட்டர்கள் அனைவருமே விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மட்டுமே யெஸ் வங்கியிலிருந்து ரூ.12,800 கோடிஅளவுக்குக் கடன் வாங்கியிருக்கிறது. இவையனைத்துமே மொத்தமாக வாராக்கடனாக மாறியிருக்கிறது. நிதி நெருக்கடியினால் நிதி மோசடியாலும் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ள யெஸ் வங்கியின் நிலைமைக்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணம். எனவே திங்கள் அன்று அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவர் நேரில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டார். ஆனால், அவருடைய உடல் நலன்கருதி அவருக்கு வேறு ஒரு தேதியில் ஆஜராக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த விசாரணை தேதி அறிவிக்கப்படவில்லை.

யெஸ் வங்கி விவகாரத்தில் அதன் நிறுவனர் ராணா கபூர் கைதுசெய்யப்பட்டு அமலாக்கத் துறையினரின் காவலில் உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணையும்நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x