Published : 16 Mar 2020 09:50 AM
Last Updated : 16 Mar 2020 09:50 AM

‘கோவிட்-19’ பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு அலிபாபா நிறுவனர் ஜாக் மா உதவி: 5 லட்சம் சோதனை கிட், 10 லட்சம் மாஸ்க் வழங்கினார்

‘கோவிட்-19’ (கரோனா) வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா போதுமான சோதனை சாதனங்கள் இல்லாமல் திண்டாடியது. இதனால் ட்ரம்ப் அரசு பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா அமெரிக்காவுக்கு உதவி செய்துள்ளார்.

சுமார் 5 லட்சம் சோதனை சாதனங்கள், 10 லட்சம் மாஸ்க்குகள் வழங்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சொந்தநாடான சீனாவில் இருந்து கற்றுக்கொண்டதிலிருந்து சொல்கிறேன், இதுபோன்ற கொடிய வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மிக விரைவான மற்றும் துல்லியமான சோதனை முறைகளும் சாதனங்களும்தான் அவசியம். அமெரிக்காவில் இதற்கான தட்டுப்பாடு உள்ளநிலையில் இந்த உதவி வைரஸ்பரவலைத் தடுக்க அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும் இதுபோன்ற பேரழிவுகளைத் தனி நாடாக எதிர்கொள்ளமுடியாது. இத்தகைய நெருக்கடியான தருணங்களில் எல்லைகள் கடந்து ஒருவருக்கொருவர் தொழில்நுட்பத்தையும், செயல்முறைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதகுலத்தை பேரழிவிலிருந்து காக்க முடியும் என்றும் கூறினார்.

பேஸ்புக் 20 மில்லியன் டாலர் நிதி

உலகம் முழுவதும் பல நாடுகளில் கோவிட் 19 வைரஸ் பாதிப்புஉள்ள நிலையில், அதை எதிர்கொள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 20 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்குவதாகக் கூறியுள்ளார். இது இந்திய ரூபாயில் சுமார் ரூ.147 கோடி ஆகும்.

இவற்றில் 10 மில்லியன் டாலர்நேரடியாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், நோய் கண்டறிதல், மற்றும் அதற்கான சிகிச்சைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள 10 மில்லியன் டாலர் சிடிசி அறக்கட்டளைக்காக வழங்கப்படும். இந்த அறக்கட்டளை அடுத்த சில வாரங்களுக்கு வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள தேவையான நிதித் திரட்டும் நிகழ்வுகளைச் செயல்படுத்தும் என்று கூறினார்.

பேஸ்புக் நிறுவனத்தைப் போலவே வேறு சில நிறுவனங்களும் நிதி வழங்க முன்வந்துள்ளன. டெக் கிரன்ச் நிறுவனம் 10 மில்லியன் டாலரை வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் இரண்டும் தலா ஒரு மில்லியன் டாலர் நிதி தந்துள்ளன. அதேபோல் கூகுள் நிறுவனமும் அதன் ஊழியர்களும் இணைந்து ஒரு மில்லியன் டாலர் வழங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x