Published : 16 Mar 2020 09:49 AM
Last Updated : 16 Mar 2020 09:49 AM

எஸ்பிஐ உள்ளிட்ட 7 வங்கிகள் யெஸ் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

புதுடெல்லி

நிதி நெருக்கடியால் திவால் ஆகும் நிலைக்கு ஆளான யெஸ் வங்கியை மீட்க எஸ்பிஐ உள்ளிட்ட ஏழு வங்கிகள் இணைந்து ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய் துள்ளன.

யெஸ் வங்கியை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடி தேவையாக இருந்த நிலையில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி உட்பட ஏழு முன்னணி வங்கிகள் யெஸ் வங்கியில் முதலீடு மேற்கொண்டுள்ளன. ஏற்கெனவே தெரிவித்தபடி யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை எஸ்பிஐ வாங்குவதாகக் கூறியிருந்தது.

அதன்படி தற்போது ரூ.6,050 கோடி முதலீடு செய்துள்ளது. இதுதவிர ஐசிஐசிஐ வங்கியும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் தலா ரூ.1,000 கோடி முதலீடு செய்துள்ளன. மேலும் ஆக்ஸிஸ் வங்கி ரூ.600 கோடியும், கோடக் மஹிந்திரா வங்கி ரூ.500 கோடியும் முதலீடு செய்துள்ளன. பந்தன் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கி இரண்டும் தலா ரூ.300 கோடியும் முதலீடு செய்துள்ளன. கூடுதலாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ரூ.250 கோடி முதலீடு செய்துள்ளது.

யெஸ் வங்கியின் ரூ.10 வீதம்கொண்ட 1000 கோடி பங்குகள் இந்த வங்கிகளுக்கு அவற்றின் முதலீடுகளுக்கு ஏற்ப பிரித்தளிக் கப்படும்

ரூ.18,564 கோடி நஷ்டம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே யெஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை விவரங்கள் வெளியாகியுள்ளன. நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் யெஸ் வங்கி ரூ.18,564 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இது அவ்வங்கி இதுவரை எதிர்கொண்டதில் மிக மோசமான இழப்பு ஆகும். சென்ற நிதி ஆண்டு இதே காலகட்டத்தில் வங்கி ரூ.1,001 கோடி லாபம் ஈட்டியது.

நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் ரூ.600 கோடி நஷ்டத்தை சந்தித்தது. அதேபோல் வங்கியின் வாராக்கடனும் கடும் அளவில் உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் டிசம்பர் முடிந்த காலாண்டில் ரூ.40,709.20 கோடியாக உயர்ந்துள்ளது. இது அவ்வங்கி அளித்த மொத்த கடனில் 19 சதவீதம் ஆகும். சென்ற நிதி ஆண்டு இதே காலகட்டத்தில் வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.5,158 கோடியாக இருந்தது.

டிசம்பர் மாத முடிவில் வங்கியின் மொத்த வைப்புத் தொகை ரூ.1.65 லட்சம் கோடியாக குறைந்தது. செப்டம்பர் காலாண்டில் அது ரூ.2.09 லட்சம் கோடியாக இருந்தது. யெஸ் வங்கி நிதி நெருக்கடியை வாடிக்கையாளர்கள் உணர்ந்த நிலையில் வைப்புத் தொகை தொடர்ந்து குறைந்தது. மார்ச் 5-ம் தேதி நிலவரப்படி யெஸ் வங்கியின் வைப்புத் தொகை ரூ.1.37 லட்சம் கோடி.

யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஏப்ரல்-3 வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000-க்குமேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது. வங்கியின் இயக்குநர்கள் குழுவை கலைத்துவிட்டு, எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை தனது பிரதிநிதியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.

இந்நிலையில், யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடு வரும் மார்ச் 18-ம் தேதி விலக்கப்படும் என்றுநேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வங்கியின் தலைமைச் செயல்அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டுகளுக்கு பிரசாந்த் குமார் தொடர்வார் என்றும் அவர் தலைமையின்கீழ் புதிய இயக்குநர்கள் குழு இம்மாத இறுதில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது யெஸ் வங்கி திவால் நிலைக்கு ஆளாகியுள்ள நிலையில், அதன் ஏ1 பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரூ.8,415 கோடி முதலீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x