

யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடு வரும் மார்ச் 18-ம் தேதி விலக்கப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது. அதேபோல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரிமற்றும் நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டுகளுக்கு எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் தொடர்வார் என்றும் அவர் தலைமையின்கீழ் புதிய இயக்குநர்கள் குழுஇம்மாத இறுதியில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கியின் தலைவர் மற்றும் இரண்டு இயக்குநர்களை ரிசர்வ் வங்கி நியமிக்கும். எஸ்பிஐ சார்பாக இரண்டு இயக்குநர்கள் இடம்பெறுவார்கள். தவிர, முதலீடு செய்யும் பிற வங்கிகளும், 15 சதவீத வாக்கு உரிமையைக் கொண்டிருக்கும்பட்சத்தில், அதன் சார்பில் ஒரு இயக்குநரை நியமிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
யெஸ் வங்கியை சீரமைப்பு செய்வதற்கான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்தவெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதன்படி யெஸ் வங்கியில் எஸ்பிஐ ரூ.7,250 கோடி முதலீடு செய்ய உள்ளது. மொத்த அளவில் 49 சதவீதப் பங்குகளை வாங்க உள்ளது. எஸ்பிஐ அதன் பங்குகளை அடுத்த மூன்று ஆண்டுகள் வரையிலும் 26 சதவீதத்துக்குகீழே குறைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் எல்ஐசி-யும் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய உள்ளது. ஆனால் எத்தனை பங்குகளை வாங்க உள்ளது, எவ்வளவு முதலீடு மேற்கொள்ள உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கிற யெஸ் வங்கியை, மார்ச் மாதம் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து யெஸ் வங்கியில் அதன் வாடிக்கையாளர்கள் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுப்பதற்கு ஏப்ரல் 3 வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதேபோல் யெஸ் வங்கி இந்த ஒரு மாதத்துக்கு கடன்கள் எதுவும்வழங்கக்கூடாது. யெஸ் வங்கியின் இயக்குநர்கள் குழு கலைக்கப்பட்டு ஆர்பிஐ தனது பிரதிநிதியாக பிரசாந்த் குமாரை நிர்வாகத்தில் கொண்டுவந்தது.
இயக்குநர்கள் குழுவில் பிராசந்த் குமார் தவிர, சுனில் மேத்தா அன்றாட அலுவல்கள் இல்லாத தலைவராகவும், மகேஷ் கிருஷ்ணமூர்த்தி, அதுல் பேதா ஆகியோர் அன்றாட அலுவல்கள் இல்லாத இயக்குநர்களாக பொறுப்பேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனில் மேத்தா பிஎன்பி-யில் அன்றாட அலுவல்கள் இல்லாத தலைவாராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் யெஸ்வங்கியை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவை. இதில் எஸ்பிஐ 49 சதவீதப் பங்குகளை ரூ.7,250 கோடியில் வாங்க உள்ளது. இது தவிர ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடி, ஹெச்டிஎஃப்சி ரூ.1,000 கோடி, ஆக்ஸிஸ் வங்கி ரூ.600 கோடி, கோடக் மஹிந்திரா வங்கி ரூ.500 கோடி பந்தன் வங்கி ரூ.300 கோடி, ஃபெடரல் வங்கி ரூ.300 கோடி என்ற அளவில் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய உள்ளன.