

‘கோவிட் 19’ வைரஸ் தொடர்பாக பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பங்குச் சந்தையை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்களின் பயத்தை போக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.
தற்போது இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சி, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானது என்றும் அடுத்த சில வாரங்களில் நிலைமை சீரடையும் என்றும் ‘கோவிட் 19’ வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக அளவில் ‘கோவிட் 19’ வைரஸ் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் உலகளாவியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் பரவியது. அதைத்தொடர்ந்து சீனாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. விளைவாக சீனாவை நம்பி இருந்த நாடுகளும் நெருக்கடியை எதிர்கொண்டன. தற்போது பிறநாடுகளுக்கும் இந்த வைரஸ்பரவியுள்ள நிலையில், இரு தினங்களுக்குமுன் இந்தியப் பங்குச் சந்தை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ந்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11.27 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியபோது,‘தற்போது பங்குச் சந்தைஉலக நாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பிற நாடுகளிலும் தாக்கம் செலுத்தும். அந்தவகையில் உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கும் சரிவின் காரணமாக தற்போது இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டைனா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பங்குச் சந்தையில் 20 சதவீதம் அளவில் வீழ்ச்சி காணப்பட்டது. தற்போது ‘கோவிட் 19’ வைரஸ் மீதான பயம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகிறது. இந்தச் சூழல் விரைவில் மாறும்’ என்று தெரிவித்தார்.
‘கோவிட் 19’ வைரஸால் உலகளாவிய அளவில் 4,300 பேர் இறந்துள்ளனர். 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத் துறை, விடுதிகள்,சினிமாத் துறை, உணவு விடுதிகள்என பல துறைகள் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு இத்துறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார்.
கோவிட்-19 தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரப் பாதிப்பை தீர்க்கும் வகையில் அரசும் ரிசர்வ் வங்கியும் செயல்பட்டு வருவதாக மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாரமனும் நேற்று தெரிவித்தார். உலகப் போக்கை தீவிரமாக கண்காணித்து வருவதாக ஆர்பிஐ-யும் நேற்று அறிவிப்பு வெளியிட்டது குறிப் பிடத்தக்கது.