

கோவிட்-19 என்று பெயரிடப்பட்ட சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் பொருளாதார, சுகாதார, சமூக நெருக்கடிகளை உருவாக்கி வரும் நிலையில் பொருளாதாரச் சரிவு அச்சத்தினால் பங்குச் சந்தைகளில் உலகம் முழுதும் வர்த்தகங்கள் மந்த நிலையை எய்தியுள்ளன.
இந்தியப் பங்குச்சந்தைகளில் பெருமளவு முதலீடு செய்யும் அயல்நாட்டு ஃபோர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் மட்டும் 8 பங்குச்சந்தை வர்த்தக அமர்வுகளில் முதலீடு செய்திருந்த ரூ.34,000 கோடியை வாபஸ் பெற்றதால் இந்தியப் பங்குச் சந்தை சரிவு கண்டது.
என்.எஸ்.டி.எல். தரவுகளின் படி அயல்நாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் ஈக்விட்டியிலிருந்து ரூ.23,500 கோடி ரூபாயை வர்த்தகத்திலிருந்து திரும்பப் பெற்றனர், இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.10,500 கோடி மதிப்புள்ள முதலீடுகளை வாபஸ் பெற்றதால் பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு கண்டு வருகிறது. இது பங்குகள் வர்த்தகத்திலிருந்து வாபஸ் பெற்ற முதலீடு நிலவரம் ஆகும்.
பாண்ட்கள் வர்த்தகத்தில் எஃப்.பி.ஐ. முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.11,061 கோடியை வாபஸ் பெற்றனர். வியாழக்கிழமை மட்டும் சுமார் ரூ.7,950 கோடி மதிப்புள்ள முதலீடுகளைத் திரும்பப் பெற்றனர்.
வியாழக்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தை பெரிய அளவில் சரிவு கண்டு சென்செக்ஸ் 2,919 புள்ளிகளையும் நிப்டி 900 புள்ளிகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.