

திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கியை மீட்டெடுக்கும் பொருட்டுஎஸ்பிஐ ரூ.7,250 கோடி முதலீடு செய்ய எஸ்பிஐ-யின் மத்திய வாரிய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மொத்த அளவில் எஸ்பிஐ யெஸ் வங்கியின் 725 கோடி பங்குகளை, ஒரு பங்கின்விலை ரூ.10 என்ற வீதத்தில் ரூ.7,250கோடிக்கு வாங்க உள்ளது.
தற்சமயம் யெஸ் வங்கியை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவை. இந்நிலையில் எஸ்பிஐ ரூ.10,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக முன்பு தெரிவிக்கபப்ட்டு இருந்தது. இந்நிலையில் ரூ.7,250 கோடி அளவிலேயே முதலீடு செய்ய அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக யெஸ் வங்கியின் 49 சதவீதப் பங்குகளை எஸ்பிஐ வாங்க உள்ளது. ஆரம்பகட்டமாக 245 கோடிப் பங்குகளை வாங்க ரூ.2,450 கோடி முதலீடு செய்ய உள்ளது.
யெஸ் வங்கியின் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு பிற நிறுவனங்களின் செயல்பாட்டிலும் தாக்கம் செலுத்தும் என்று இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 3-ம் தேதிவரை யெஸ்வங்கியில் அதன் வாடிக்கையாளர்கள் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் யெஸ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பிற நிறுவனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும். அந்நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று இந்தியா ரேட்டிங் தெரிவித்துள்ளது.