இனிப்பான செய்தி: இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; எஸ்பிஐ வங்கி அறிவிப்பு: 44.51 கோடி பேர் பயன்பெறுவார்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இனிமேல் தங்களின் சேமிப்புக் கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ள 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.

தற்போது, எஸ்பிஐ வங்கியில் மூன்று வகையான பிரிவுகளில் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படுகிறது.

பெருநகரங்களில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் சேமிப்புக் கணக்கில், மாதம் ரூ.3 ஆயிரமும், சிறிய நகரங்களில் வசிப்போர் அங்குள்ள வங்கியில் கணக்கு வைத்திருந்தால் மாதம் ரூ.2 ஆயிரமும், கிராமப்புற வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் ரூ.ஆயிரமும் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையாகப் பராமரிக்க வேண்டும்.

இதில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 வரை அபராதமும், ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.

இனிமேல் எந்தவிதமான குறைந்தபட்ச இருப்புத் தொகையும் அதாவது ஜீரோ பேலன்ஸ் கணக்கைப் பராமரிக்கலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக வங்கிக்கணக்கு வைத்திருப்பவர் கூடுதலாக ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இது தவிர எஸ்பிஐ வங்கி வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் காலாண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் எஸ்எம்எஸ் கட்டணத்தையும் விலக்கிக் கொண்டுள்ளது.

மேலும், முக்கிய அறிவிப்பாக வைப்புத் தொகைக்கான வட்டியைக் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. தற்போது சேமிப்புக் கணக்குகளில் வைப்புத் தொகைக்கு ரூ.1 லட்சம் வரை 3.25 சதவீதம் வட்டியும், ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக 3 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இது மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து சேமிப்புக் கணக்கு டெபாசிட்களுக்கும் ஒரே மாதிரியாக 3 சதவீத வட்டியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜ்னிங் குமார் விடுத்த அறிக்கையில், "எஸ்பிஐ வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள். முகத்தில் புன்னகை இருக்கும். இந்த அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியுடன் வைத்திருக்கும் தொடர்பு இறுக்கமாகி, நம்பிக்கையை அதிகப்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடன் விகிதத்துக்கான இறுதிநிலைச் செலவு (எம்சிஎல்ஆர்) விகிதம் 10 முதல் 15 புள்ளிகள் வரை மார்ச் 10-ம் தேதி முதல் குறைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்தது. இதன் மூலம் வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் பெறுவது அதிகரிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in