வங்கித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

வங்கித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

பொதுத்துறை வங்கித் தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது இணைப்பு நடவடிக்கை எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறித்தும், அதில் எதிர்ப்படும் பிரச்சினைகள் குறித்தும் வங்கி தலைவர்களின் கருத்துகளை அவர் கேட்டறிய உள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்க ஒப்புதல் அளித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

வங்கி இணைப்பு நடவடிக்கைகளுக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், திட்ட அணுகுமுறை குறித்தும் அவர் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

பிரதான வங்கிகளுடன் இணையும் துணை வங்கிகளைசேர்ப்பதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்று அவர் வலியுறுத்துவார். அதேபோல வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

வங்கிகளின் கடன் வழங்கு நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்றும், அதுபொருளாதாரம் சார்ந்தது என்றும் அவர் வலியுறுத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பின்படி பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா இணைகின்றன. இதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உயரும். சிண்டிகேட் வங்கியானது கனரா வங்கியுடன் இணைகிறது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகள் ஒன்றிணைந்து ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவெடுக்க உள்ளது.

இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி இணைவதால் 7-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உயர உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in