

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அந்த இடத்தை தவற விட்டார்.
அம்பானியின் சொத்து மதிப்பு580 கோடி டாலர் அளவுக்கு சரிந்தது. இதனால் அவர் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா குழும நிறுவனர் ஜாக்மா 4,450 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இவரது சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியை விட 260 கோடி டாலர் அதிகமாகும்.
நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலை 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. சவூதி அரேபியா மற்றும் ரஷியாஇடையிலான கச்சா எண்ணெய் போர் மற்றும் கோவிட் 19 வைரஸ்அச்சுறுத்தல் ஆகியவற்றால் கடுமையாக சரிந்தது. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தன.
தற்போது கடுமையான சரிவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தித்துள்ளதால் 2021-ம்ஆண்டுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற முகேஷ் அம்பானி வரையறுத்திருந்த இலக்கு எட்டமுடியுமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகளை சவூதி ஆராம்கோ நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்திருந்தார். ஆனால் இத்திட்டமும் நிர்ணயித்த இலக்கை எட்ட உதவுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தாக்குதல் காரணமாக அலிபாபா நிறுவனவர்த்தகமும் சிறிது பாதிக்கப்பட்டது. இருந்தாலும் குழும நிறுவனங்களான கிளவுட் கம்ப்யூடிங் சேவை மற்றும் மொபைல் செயலி வருவாய் மூலம் ஈடுகட்டப்பட்டது.
ஆனால் இதுபோன்று வருவாய் அல்லது சொத்துமதிப்பை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு இப்போதைக்கு தென்படவில்லை. நேற்று முன்தினவர்த்தகத்தில் நிறுவன பங்குகள்12% வரை சரிந்தன. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச சரிவை இந்நிறுவனம் தற்போதுதான் எதிர்கொண்டுள்ளது. இந்த ஆண்டுசரிவு 26 சதவீத அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக பெரும் பணக்காரர்களில் பலரது சொத்து மதிப்பு சரிந்துள்ளன. சராசரியாக 7.5 சதவீத அளவுக்கு சரிவு காணப்பட்டது. அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சப்-பிரைம் தேக்க நிலைக்குப் பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு சரிவு காணப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் தொலைத் தொடர்பு சேவை, தொழில்நுட்பம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட நிறுவனங்களின் கடன் சுமையும் கடந்த சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மட்டும் 5,000 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் கடன் மூலம் திரட்டப்பட்டவை. மூன்று ஆண்டுகளில் முதலிடத்துக்கு இந்நிறுவனம் உயர்ந்தபோதிலும் கடன் சுமை அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்குவது தொடர்பாக ஆராம்கோ இடையிலான பேச்சுவார்த்தை இன்னமும் இறுதி நிலையை எட்டவில்லை. இதனால் இந்த ஒப்பந்தம் நிறைவேறுமா என்ற அச்சமும் உருவாகியுள்ளது. மேலும் இந்திய அரசும் இந்தஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுவும் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு பெரும் முட்டுக்கட்டையாகத் திகழ்கிறது.