யெஸ் வங்கி நிலைமை விரைவில் சீரடையும்: ரிசர்வ் வங்கி நிர்வாகி பிரசாந்த் குமார் தகவல்

யெஸ் வங்கி நிலைமை விரைவில் சீரடையும்: ரிசர்வ் வங்கி நிர்வாகி பிரசாந்த் குமார் தகவல்
Updated on
2 min read

யெஸ் வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு நிலைமை சீரடையும் என்று ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட யெஸ் வங்கி நிர்வாகி பிரசாத் குமார் தெரிவித்தார்.

வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலான செயல்பாடுகள் இருப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைத்து ஏடிஎம்மையங்களிலும் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

வங்கிக் கிளைகளைப் பொறுத்தமட்டில் அனைத்து பணியாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார். இக்கட்டான தருணத்தில் வங்கிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

ஏப்ரல் 3-ம் தேதிவரை வங்கி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம்வரை மட்டுமே எடுக்கும் கட்டுப்பாட்டை ஆர்பிஐ மார்ச் 5-ம் தேதி விதித்தது. அத்துடன் வங்கி செயல்பாடுகளைக் கண்காணிக்க எஸ்பிஐ-யின்முன்னாள் தலைமை நிதி அதிகாரியான பிரசாந்த் குமாரை வங்கியின் நிர்வாகியாக நியமித்தது.

வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலைபோக்க பணியாளர்கள் வருவதாகவும், பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யெஸ் வங்கிக்கு ஆர்பிஐ விதித்தகட்டுப்பாடு காரணமாக நிதிச் சந்தைகுறிப்பாக அந்நியச் செலாவணிவர்த்தகம், கடன் அட்டை பரிவர்த்தனை, டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் முன்பாகவே வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை மார்ச் 14-ம் தேதி வெளியிடப் போவதாக வங்கி ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டபடி இம்மாதம் 14-ம் தேதி வங்கியின் நிதி நிலை அறிக்கையை வெளியிட முயற்சித்து வருவதாக குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செபி-க்கு அனுப்பிய தகவலில் வங்கியின் நிர்வாகப் பொறுப்பை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த் குமார், வங்கியின் தணிக்கை செய்யப்படாத நிதி நிலை அறிக்கையை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

வங்கிக்கு தேவைப்படும் மூலதனம் எஸ்பிஐ 49 சதவீத பங்குகளைப் பெற்று அளிக்க உள்ள ரூ.2,450 கோடியை விட அதிகம் என்றார். இயக்குநர் குழு கூட்டத்துக்குப் பிறகு வங்கியின் செயல்பாடு, நிதி நிலை விவரம் உள்ளிட்டவிஷயங்களில் தெளிவான புள்ளிவிவரம் தெரியவரும் என்றார். வங்கிக்கு அதிக நிதி தேவைப்படுவதால் பிற வங்கிகளுடனும் அதாவது யெஸ் வங்கியில் முதலீடு செய்யத்தயாராக உள்ள நிதி நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தி வருவதாகஅவர் குறிப்பிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் மூலதன தேவைக்கான நிதி திரட்டப்பட்டு பிரச்சினை முடிவுக்கு வரும் என்றார்.

லுக்அவுட் நோட்டீஸ்

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீது லுக்அவுட் நோட்டீஸை (தேடப்படும் நபர்) சிபிஐபிறப்பித்துள்ளது. ராணா கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக இது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ராணா கபூர், அவரது மனைவி பிந்து, மகள்கள் ரோஷினி, ராகே, ராதா ஆகியோர் மீதும், டிஹெச்எஃப்எல் நிறுவனர் கபில் வாத்வான், தீரஜ் வாத்வான், ஆர்கேடபிள்யூ டெவலப்பர்ஸ் நிறுவனர் மீதும் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in