Published : 15 Aug 2015 11:45 am

Updated : 15 Aug 2015 11:45 am

 

Published : 15 Aug 2015 11:45 AM
Last Updated : 15 Aug 2015 11:45 AM

இந்திய வளர்ச்சி உலகத்துக்கே ஒரு நற்செய்தி

ஒவ்வொரு சுதந்திர தினமும், நாடு இதுவரை அடைந்துள்ள வளர்ச்சியை அசைபோடுவதற்கு நல்லதொரு வாய்ப்பு; அன்றாட நிகழ்ச்சிகள் குறித்துக் கவலைப்படுவதை நிறுத்திவைத்து கடந்த 68 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அல்லது தேக்க நிலையை ஆராய்வது நல்லது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் 3 பெரிய திருப்புமுனைகள் இடம்பெற்றுள்ளன. 1947 ஆகஸ்டில் ‘அரசியல் சுதந்திரம்’ பெற்றோம்; 1991 ஜூலையில் ‘பொருளாதாரச் சுதந்திரம்’ பெற்றோம்; 2014 மே மாதம் ‘கண்ணியத்தை’ மீட்டுக்கொண்டோம்.

தேர்தல் முடிவு

கடுமையான உழைப்பால் முன்னுக்கு வந்த ‘தேநீர் வியாபாரி’யின் அரசியல் வெற்றியானது மனிதர்களின் தனிப்பட்ட கண்ணியம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்திற்று. சுய உழைப்பால் நடுத்தர வர்க்கமாக முன்னேறிய கோடிக்கணக்கான மக்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்ப கடந்த மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. பீடா விற்போர், ஆட்டோ ஓட்டுவோர், வீதிகளிலேயே அலைந்து திரிந்து வேலை செய்வோர் என்றாலே நமக்கிருந்த இளக்காரத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையை அந்த முடிவு ஏற்படுத்தியது.

தேக்க நிலையிலிருந்து மாற்றம்

நாடு சுதந்திரம் பெற்றவுடன், ஜவாஹர்லால் நேரு உருவாக்க விரும்பிய ‘நவ பாரதம்’ ஏற்படும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். அப்போது நாங்கள் ‘சோஷலிஸ்டுகள்’. ஆண்டுகள் செல்லச்செல்ல, நேருவின் ‘கலப்புப் பொருளாதாரக் கொள்கை’ நம்மை முட்டுச் சந்துக்குக் கொண்டுபோவதை உணர்ந்தோம்.

சோஷலிசத்தை அடைவதற்குப் பதிலாக தேக்கநிலையை அடைந்தோம். அதைத்தான் கேலியாக, ‘லைசென்ஸ் ராஜ்’ என்று அழைத்தார்கள். 1991-ல் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தம் அந்த வேதனையை முடிவுக்குக் கொண்டுவந்தது. அன்றிலிருந்து பொருளாதார ரீதியாக இந்தியா உயர்ந்து வருகிறது. சுதந்திரம், ஜனநாயகம் என்ற இரு அஸ்திவாரங்களின் மீது ‘சுதந்திரச் சந்தை’ இங்கே செயல்படத் தொடங்கிவிட்டது. உயிர்த்துடிப்புள்ள நம்முடைய ஜனநாயகத்துக்கு நேருதான் அடித்தளமிட்டுக் கொடுத்தார்; பொருளாதாரத்தைக் கட்டிவைத்த கொள்கைகளைத் தளர்த்திய பிறகே நம் நாட்டுக்கு வளம் பெருகத் தொடங்கியது.

சீரான வளர்ச்சி

130 கோடி மக்களைக் கொண்ட, சந்தைக்கடை இரைச்சலை மிஞ்சுகிற ஒரு ஜனநாயக நாடு எப்படி உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்க முடிகிறது என்று உலகத்தாரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தியா அமல்படுத்திய அதே சீர்திருத்தங்களை கிட்டத்தட்ட வேறு 60 நாடுகளும் அமல்படுத்தின. ஆனால் இந்தியாவில் மட்டும் பொருளாதாரம் வேகம் பெற்றது. இந்தியத் தொழிலதிபர்கள் உத்வேகம் பெற்று கடுமையான தொழில் போட்டிக்குத் தயாராவார்கள், உற்பத்தியைப் பெருக்கி லாபம் சம்பாதிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சீனத்தில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ‘மேலிருந்து கீழே’ திணிக்கப்பட்டபோது, இந்தியாவில் ‘கீழிருந்து மலர்ந்து’ மேலே படர்ந்து கிளை பரப்பியது. ஏழைகளால் சுயகட்டுப்பாட்டுடன் உழைத்து தங்களைத்தாங்களே முன்னுக்குக் கொண்டுவர முடியாது என்பதைப் பொய்யாக்கி வருகிறது இந்தியா.

நினைக்க வேண்டிய நேரமிது

மக்கள் தனக்கு ஏன் வாக்களித்தார்கள் என்பதை மோடி நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு முறை ‘இந்துத்துவா’ என்று சொன்னபோதும் ‘வளர்ச்சி’ என்ற சொல்லையும் சேர்த்தே உச்சரித்து பிரசாரம் செய்தார். இப்படி 500 முறை பேசியிருப்பதாக டாக்டர் வால்டர் ஆண்டர்சன் என்ற அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரி, கணினி உதவியுடன் கணக்கெடுத்துச் சொல்கிறார். ‘வளர்ச்சி’ என்பது போட்டிகள் நிலவும் சந்தையில் கிடைக்கும் ‘வாய்ப்பு’ என்பதற்கான சங்கேத வார்த்தை. ‘இன்ஸ்பெக்டர் ராஜ்’ ஒழிக்கப்படும் என்றார் மோடி. அதை இன்னமும் அமல்படுத்தவில்லை. முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் நடைமுறையும் அப்படியே நீடிக்கிறது. தொழில், வர்த்தகம் செய்ய ஏற்ற இடமாக இந்தியா மாறாமல், விரோதப் போக்கே தொடர்கிறது.

விவரம் தேவை

புதிய திட்டத்தையோ வழிமுறையையோ சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும். 2014 மே தொடங்கி அறிவித்த பல்வேறு திட்டங்கள் இப்போது எந்த நிலையில் அமலாகின்றன என்ற விவரத்தைத் தர வேண்டும். தொழில் செய்வதற்குத் தடையாக உள்ள அம்சங்கள் எந்த அளவுக்கு நீக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்க வேண்டும். குஜராத்தில் அவர் செய்த சாதனைகளுக்காகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு திட்டத்தைத் தீட்டுவதைவிட, அறிவிப்பதைவிட செயல்படுத்துவதுதான் முக்கியம். குஜராத்தில் அதில் சிறந்து விளங்கினார்.

பாரபட்சம் கூடாது

பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் சீனத்தில் டெங் சியோ பிங்கும் சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவித்ததைப்போல மோடியும் செயல்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரத்தில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் பரம ஏழைகளாகின்றனர் என்றே மக்கள் நினைக்கின்றனர். இதனால் சீர்திருத்தம் என்றாலே சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். தொழில் வளர்ச்சியால் உருவாகும் செல்வம் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ‘மன்-கி-பாத்’ (மனதிலிருப்பதைப் பேசுகிறேன்) என்ற அவருடைய நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சுதந்திரச் சந்தைக்குச் சாதகமாக இருப்பது, தொழிலதிபர்களுக்குச் சாதகமாக இருப்பதாகிவிடாது என்று மக்களுக்கு அவர் விளக்க வேண்டும். சுதந்திரச் சந்தையில் போட்டி இருக்கும், குறைந்த செலவில் தயாரித்து, குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அது நுகர்வோர்களுக்குத்தான் நன்மை தரும். முதலாளித்துவம் என்பது தன் போக்கில் செயல்பட முடியாமல் விதிகளின்படி செயல்பட்டாக வேண்டும். தொழிலதிபர்கள் சார்ந்த நிர்வாகம் என்றால் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும்தான் அதிகாரங்களைக் கையில் வைத்திருப்பார்கள். அவர்கள் தொழிலதிபர்களுக்குச் சார்பாக மட்டும் செயல்படுவார்கள். இதைத்தான் ‘சலுகைசார் முதலாளித்துவம்’ (குரோனி கேபிடலிசம்) என்று சாடுகின்றனர்.

தருமத்தின் சாரம்

அரசியல் சட்டப்படிதான் நாட்டின் நிர்வாகம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தண்டனைகளுக்காக அஞ்சி மட்டுமல்ல மக்கள் சட்டத்தைப் பின்பற்றுவது, சட்டம் நியாயமானது என்று உணர்ந்ததாலேயே பின்பற்றுகின்றனர்.

நிர்வாக சீர்திருத்தம் என்பது இந்தியர்கள் கடைப்பிடித்து வரும் தார்மிகக் கொள்கைகளின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலை நாடுகளின் அரசியல் சட்டம் புனிதமானது என்ற கொள்கை மக்களிடம் எதிரொலிக்கவில்லை; சட்டத்தைவிட தர்மத்தின்படி நடக்க வேண்டும் என்பதே மக்களுடைய சிந்தனையாக இருந்தது. இதைப் புரிந்துகொண்ட காந்திஜி, சாதாரண தர்மத்தையே மிகப்பெரிய அறமாக முன்வைத்தார். இந்த தர்மம்தான் மக்களுடைய வாழ்க்கையில் சுகத்தையும் சௌஜன்யத்தையும் அமைதியையும் அளித்தது. மக்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டு சமூக அமைதிக்கு ஒத்துழைத்தார்கள். இதனால்தான் நம்முடைய அரசியல் சட்டத்தை வகுத்த மேதைகள், தர்மச் சக்கரத்தை தேசியக் கொடியின் மையத்திலேயே பொறித்தார்கள். நம்முடைய அரசியல் சட்டம் என்பதே தருமத்தின் சாரம் என்று அழைத்தார் பாரத் ரத்னா விருதுபெற்ற பி.வி. காணே.

தீண்டாமையை ஒழிக்க முடியாமல் காந்திஜி தோற்றிருக்கலாம், சுதந்திரப் போராட்டத்துக்கு உயிர் கொடுத்தவர் அவர்தான். அதே போன்ற உணர்வை நம்முடைய அரசியல் சட்டத்தைப்பற்றியும் நம்முடைய இளைய தலைமுறைக்கு நாம் ஊட்ட வேண்டும். சட்டத்தை மதித்து நடக்கும் எண்ணம் மக்களுடைய இதயங்களிலிருந்து வர வேண்டும்.

நற்செய்தி

பொருளாதார ரீதியாக இந்தியா வளர்வதுதான் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். இது நமக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நற்செய்திதான். முதலாளித்துவக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு செயல்பட முடியாமல் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும்போது, கிழக்கில் உள்ள மிகப்பெரிய நாடு அரசியல், பொருளாதார சுதந்திரக் கருத்துகளின் அடிப்படையில் வளர்ந்து வருகிறது; வெளிப்படையான சுதந்திரச் சமூகங்களும், தடையற்ற வர்த்தகமும், உலகப் பொருளாதாரத்துடனான பன்முக இணைப்பும்தான் தேசத்தின் வெற்றிக்கும் நிரந்தரமான வளத்துக்கும் காரணமாக இருக்க முடியும் என்று உணர்த்துகிறது.

gurcharandas@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்தியப் பொருளாதாரம்இந்தியாவின் வளர்ச்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author