

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் என்.எஸ். விஸ்வநாதன், அவருடைய பதவிக் காலம் முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலை காரணமாக அவர் இம்முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய ராஜினாமா மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வருகிறது.
பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றஎன்.எஸ்.விஸ்வநாதன், 1981-ம் ஆண்டு முதல்ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அதன்படி, வங்கிகள் தொடர்பான விதிமுறைகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிலை ஆய்வு உள்ளிட்ட செயல்பாடுகளைக் கவனித்து வந்தார். அதற்கு முன்னதாக வங்கிசாரா பிரிவில் முதன்மை பொது மேலாளராக இருந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவருடைய பதவிக்காலம் முடிய இருந்த நிலையில், கூடுதலாக ஒரு வருடம், அதாவது 2020 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் துணை கவர்னர் பொறுப்புக்கு நிர்வாக இயக்குநர்கள் லில்லி வதேரா மற்றும் ராஜேஷ்வர் ராவ் ஆகிய இருவரின் பெயர் பரிந்துரையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.