

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு குறித்து மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சர்வதேச சூழல் மற்றும் உள்நாட்டில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பங்கு சந்தையில் ஏற்படும் பாதிப்புகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஆர்பிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
‘கோவிட்-19’ பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்ற, இறக்க சூழல்நிலவுகிறது. பங்குச் சந்தைகளில்நிலையற்ற போக்கு காணப்படுகிறது. பங்குச் சந்தை முதலீடுகளை திரும்பப் பெறும் போக்கு அதிகரித்து வருவதால் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம்தற்போது தெரிய ஆரம்பித்துள்ளது. இங்கு பாதுகாப்பான சூழல் இருந்தாலும், பிற நாடுகளில் காணப்படும் பதற்றமான நிலைமையின் தாக்கம் இங்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் ஏற்படும் சூழலை சமாளிக்கவும், பங்குச் சந்தை நிலையற்ற சூழலைஎதிர்கொள்ளவும் தயாரான சூழலில் இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் குடிமக்களுக்கு மார்ச் 3-ம் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட இ-விசாக்களை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இரண்டு பேருக்கு ‘கோவிட்-19’ தாக்குதல் இருப்பது உறுதியான சூழலில் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.