பொதுப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகும் அரசின் கட்டுப்பாட்டில்தான் எல்ஐசி இருக்கும்- மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பொதுப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்த அவர் அரசுத் துறை நிறுவனமாகவே அது பட்டியலிடப்படும் என்று கூறினார்.
இது தொடர்பாக எழுத்து மூலமாக அளித்த பதிலில், ஒரு நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் அதன் நிர்வாக செயல்திறன் மேம்படும். அதன் மூலம் அதன் சந்தை மதிப்பை உணர முடியும் என்றார். மேலும் இத்தகைய நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்வதற்கும் வழியேற்படும். நிறுவனம் அடையும் லாபத்தின் பலனை பொதுமக்களும் அடைய முடியும் என்றார்.
பொதுப் பங்கு வெளியீடு நடவடிக்கையானது தேவையான சட்ட ரீதியான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு உரிய கட்டுப்பாட்டு அனுமதி பெறப்பட்ட பிறகு அமல்படுத்தப்படும் என்றார்.
இந்நிறுவனத்தில் அதிக பங்குகளைக் கொண்டதாக அரசு இருக்கும். இதன் மூலம் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் செயல்படும். இதன் மூலம் காப்பீடு செய்தவர்களின் நலன்கள் காக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுப் பங்கு வெளியிடுவதன் மூலம் இத்துறையில் எல்ஐசி-க்குஉள்ள சந்தை பங்களிப்பு சிறிதும்குறையாது என்று அவர் குறிப்பிட்டார். மார்ச் 2019 நிலவரப்படிஎல்ஐசியின் சந்தை 74.71 சதவீதமாகும். முதலாண்டு பிரீமியத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 66.24 சதவீதமாக உள்ளது.
எல்ஐசி வெளியிட்ட தகவலின்படி ஜனவரி 31, 2020 நிலவரப்படி நிறுவனத்தின் சந்தை 77.61 சதவீதமாகும். முதலாண்டு பிரீமியம் வசூலில் நிறுவனத்தின் பங்கு 70.02 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான 34 நிறுவனங்களில் உத்திசார் அடிப்படையில் பங்கு விலக்கல் நடவடிக்கை எடுக்க கொள்கைஅளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு கேள்விக்கு பதிலளித்த இணையமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்தார்.
உத்திசார் பங்கு விலக்கல் என்பது, பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதாகும்.
ரூ.7.52 லட்சம் கோடி வரி வசூல்
நேரடி வரி வசூல் மூலம் ஏப்ரல்முதல் ஜனவரி வரையான காலத்தில் ரூ.7.52 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
திருத்திய மதிப்பீட்டின்படி நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வசூல் இலக்கு ரூ.11.70 லட்சம் கோடியாகும். கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி 31-ம் தேதி வரையில் வசூலான தொகை ரூ.7,52,472 கோடி என்று அனுராக் தாகுர் தெரிவித்தார். நேரடி வரி விதிப்பில் நிறுவன வர மற்றும் வருமான வரி விதிப்புகள் உள்ளடக்கியதாகும்.
முன் தேதியிட்டு வரி செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் வரை உள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்பது இப்போதே கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
திருத்திய மதிப்பீட்டின்படிநடப்பு நிதி ஆண்டுக்கான வரி வசூல் இலக்கு ரூ.18.50 லட்சம் கோடியாகும். இது முன்னர் ரூ.19.62 லட்சம் கோடியாக இருந்தது.
நிறுவன வரி குறைந்தது, வருமான வரி குறைப்பு, சுங்க வரி, உற்பத்தி வரி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட வசூலான தொகை குறைந்ததாக அவர் தெரிவித்தார்.
