

நாடு முழுவதும் சரக்கு மற்றும்சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. விற்பனை வரி, உற்பத்தி வரி, சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளுக்கு பதில் இந்த ஒருங்கிணைந்த வரி முறை அறிமுகம்செய்யப்பட்டது.
ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மறைமுக வரி வருவாய் கிடைக்கவில்லை. வரி ஏய்ப்பே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்கள் பொருட்களை வாங்கும்போதும் சேவைகளைப் பெறும்போதும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்குவதை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஜிஎஸ்டி லாட்டரி திட்டம் வரும் ஏப்ரல் 1-ல் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வது குறையும் என அரசு கருதுகிறது. வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி கூறும்போது, “வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில், வருவாய் துறை சார்பில் மாதந்தோறும் குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதற்காக ஒருசெல்போன் செயலி அறிமுகம் செய்யப்படும். அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் ஜிஎஸ்டி ரசீதுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து குலுக்கலில் பங்கேற்கலாம். குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் அல்லது சேவைகளை பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநில வாரியாக ஒரு பம்பர் பரிசும், 2-வது மற்றும் 3-வது பரிசும் வழங்கப்படும்” என்றார்.
மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “ஜிஎஸ்டி லாட்டரி பரிசுகள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும்” என்றார்.