

சீனாவில் பரவியுள்ள ‘கோவிட் 19' வைரஸ் தாக்கத்தால், வாகன உற்பத்தியில் குறிப்பிடும்படியாக எவ்வித பாதிப்பும் இல்லை என்று முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாருதி சுசூகி, டொயோடா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவ னங்கள் அதன் வாகன உற்பத்திக்குத் தேவையான உதிரி பாகங்களில் குறிப்பிட்டவற்றை சீனாவிலிருந்து பெற்று வருகின்றன. தற்போது சீனாவில் ‘கோவிட் 19' வைரஸ் பரவியுள்ளதால் அங்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உற்பத்தியைப் பாதிக்கும் அளவுக்கு விநியோகம் தடைபடவில்லை என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஈடுபடும் டிவிஎஸ் மற்றும் ஹீரோ கார்ப் ஆகிய இரு நிறுவனங்கள், கோவிட் 19 வைரஸினால் அந்நிறுவனங்களின் உற்பத்தி 10 சதவீதம் அளவில் பாதிக்கும் என்று தெரிவித்திருந்தன. இந்நிலையில் மாருதி சுசூகி, ஹூண்டாய், டொயோடா ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளன.
கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் உலகளாவிய விற்பனை சரியும் என்றும் மூடி’ஸ் தெரிவித்தது. உலகளவில் சென்ற ஆண்டில் வாகன விற்பனை 4.6 சதவீதம் குறைந்தது. 2020-ல் விற்பனை 2.5 சதவீதம் அளவில் குறையும் என்று மூடி’ஸ் கணிப்பு வெளியிட்டது.