Published : 02 Mar 2020 08:34 AM
Last Updated : 02 Mar 2020 08:34 AM

பொது நிதி மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் அவசியம்: குடிமை கணக்கு அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

44-வது குடிமை கணக்கு நாள் நிகழ்வில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், 15-வது நிதிக் குழு உறுப்பினர் அசோக் லஹிரி.

புதுடெல்லி

பொது நிதி மேலாண்மை தொடர்பான செயல்பாடுகளை எளிமையாக்கும் வகையில் குடிமை கணக்கு அதிகாரிகள், நவீனதொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ம் தேதி ‘குடிமை கணக்கு நாள்’ கொண்டாடப்படுகிறது. நேற்று டெல்லியில் நடைபெற்ற அந்நிகழ்வில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன்,

‘‘தொழில்நுட்பங்களில் புதிய புதிய மாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குடிமை கணக்கு அதிகாரிகள் அம்மாற்றங்களை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். குடிமை கணக்கு அதிகாரிகள் என்பவர்கள் தணிக்கை செய்யும் நபர்கள் மட்டும் அல்ல, தொழில்நுட்ப வல்லுநர்களும்கூட. அந்தவகையில் மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை பொது நிதி மேலாண்மை தொடர்பான பணிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்மூலம் நிதிமேலாண்மை செயல்பாடுகள் எளிமையாகும்; வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். தற்போது ஜிஎஸ்டி மற்றும் நேரடி மானியப் பரிவர்த்தனை (டிபிடி) பற்றி உலகமே பேசுகிறது. நிச்சயம் இது பெரிய புரட்சிதான். நேரடி மானியப் பரிவர்த்தனை மூலம் ரூ.1 லட்சம் கோடி சேமிக்க முடிவது என்பது சாதாரண விஷயமல்ல. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்காக ரூ.1 லட்சம்கோடி சேமிக்கப்படுகிறது என்றுஅர்த்தம். நவீன தொழில் நுட்பங்களின் வழியே ஊழல்கள், மோசடிகள் களையப்பட்டுள்ளன. அவ்வகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிதி மேலாண்மை செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.

மத்திய அரசு விவசாயிகளுக்கான மானியம், சமையல் எரிவாயுகளுக்கான மானியம் ஆகியவற்றை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே அனுப்புகிறது. இதனால் போலி ரேஷன் கார்டு அல்லது இறந்தவர்களின் பெயரில் உள்ள ரேஷன் கார்டுகளைக் கொண்டு மானியம் பெற்று வந்தது முற்றிலுமாக நின்றுள்ளது. விளைவாக மானியத்தில் அரசுக்கு சேமிப்பு கிடைத்துள்ளது. டிபிடிமுறையால் நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் அரசுக்கு ரூ.28,700 கோடி சேமிப்பாகியுள்ளது. இதுகிட்டத்தட்ட 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு சமமான தொகையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x