

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதன் வருவாய் பகிர்வு (ஏஜிஆர்) அடிப்படையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கான பாக்கியில் 8004 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் இன்று செலுத்தியது.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.
அந்த வகை யில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். அதற்கான காலக் கெடு ஜனவரி மாதம் முடிந்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் மட்டும் அதன் நிலுவைத் தொகையை செலுத்தியது.
ஏஜிஆர் விவகாரம் தொடர்பாக, பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா உச்ச நீதிமன்றத்தில் திருத்த மனுத்தாக்கல் செய்தன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறையை கேட்டுக் கொண்டன.
அந்நிறுவனங்களின் வேண்டு கோளை ஏற்று, தொலைத் தொடர்புத் துறை கால அவகாசம் அளித்தது. வோடாஃபோன் ஐடியா ரூ.53,039 கோடி, ஏர்டெல் ரூ.35,586 கோடி அளவில் நிலுவை வைத்திருந்தன.
இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கில் அனைத்து நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது பாக்கித் தொகையை மார்ச் 1-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.10,000 கோடியைச் ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது. இந்தநிலையில் காலக்கெடு முடிவடையும் நிலையில் மேலும் 8004 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் இன்று செலுத்தியது.