Published : 27 Feb 2020 08:01 AM
Last Updated : 27 Feb 2020 08:01 AM

`கோவிட் 19’ பாதிப்பு தீவிரம்: சர்வதேச சந்தைகளில் கடும் பாதிப்பு மும்பை பங்குச் சந்தை 392 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை

தொடர்ந்து நான்காவது நாளாக மும்பை பங்குச் சந்தை கடுமையான சரிவை எதிர்கொண்டது. உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்19 பிற நாடுகளுக்கும் பரவி வருவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து பல நாடுகளின் பங்குச் சந்தைகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாயின.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவு காணப்பட்டது. ஒரு கட்டத்தில் 521 புள்ளிகள் வரை சரிவு காணப்பட்டது. இறுதியில் வீழ்ச்சியின் அளவு 392 புள்ளிகளாகக் குறைந்ததில் குறியீட்டெண் 39,888 புள்ளிகளில் நிலை கொண்டது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 119 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 11,678 புள்ளிகளானது.

சன் பார்மா பங்குகள் பலத்தசரிவை சந்தித்தன. இதற்கு அடுத்தபடியாக மாருதி, லார்சன் அண்ட் டூப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

உலோக நிறுவன பங்குகளில் ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர்நிறுவனப் பங்குகள் 5 சதவீத அளவுக்கு சரிந்தன. இதைத் தொடர்ந்து என்எம்டிசி, ஹின்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், வேதாந்தா, செயில், நால்கோ, டாடா ஸ்டீல் நிறுவன பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தமட்டில் அப்பல்லோ டயர்ஸ், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ், மாருதி சுஸுகி, எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ், ஐஷர் மோட்டார்ஸ், அமரராஜா பேட்டரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை.

அதேசமயம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்), ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவன பங்குகள் கணிசமாக ஏற்றம் பெற்றன.

கோவிட் 19 (கரோனா வைரஸ்) பாதிப்பு பல நாடுகளிலும் தெரிவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. ஷாங்காய், டோக்கியோ, சியோல்,ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் பீதி காரணமாக ரத்து செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்நாட்டு பங்குச் சந்தை 1.1 சதவீத அளவுக்கு பாதிக்கப்பட்டது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ.71.64 என்ற விலையில் வர்த்தகமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x