

புதிய தொழில்நுட்பங்களுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும்போது அதில் நம்பகத் தன்மை இருக்கவேண்டியது அவசியம் என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தின் பலன் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்கள் பல்வேறு தரப்பட்டகுழுக்களாக செயல்படுகின்றனர். இதனால் அவர்களையும் அறியாமல் ஒரு சார்பாக செயல்படும் விதமாக அவர்களது தொழில்நுட்ப உருவாக்கம் அமைந்துவிடுகிறது. அவ்விதம் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) பலருக்கும் பயன்படும் விதமாக இருத்தல் அவசியம் என்றார்.
நமது சமூகத்தில், வாழ்வியலில் தொழில்நுட்பங்கள் தவிர்க்கமுடியாத அம்சங்களாக மாறிவிட்டன. அவை சிறப்பானவையாக, சமூகத்துக்கு பயனுள்ளதாக உருவாக்க வேண்டிய கடமை தொழில்நுட்பவியலாளர்களுக்கு உள்ளது என்றார். ஒவ்வொரு தனிப்பட்ட கண்டுபிடிப்பாளரும் அதற்குரிய வடிவமைப்பை உருவாக்குகின்றனர். அதை குழுவினர் பெரிதுபடுத்தி பெரிய அளவில் உருவாக்கும்போது அது மக்களிடம் சென்று சேர்கிறது. எனவே கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களை ஒருங்கிணைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்தும் சமூகத்தின் மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக அமையவேண்டும். குறிப்பாக சில்லறை வர்த்தகம், சுகாதாரம், வேளாண் துறை உள்ளிட்டவற்றுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து நுட்பங்களும் இந்த சமூகத்துக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். அதாவது கண்டுபிடிப்பாளர், பங்குதாரர் மற்றும் வாடிக்கையாளர் ஆகிய மூவரையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவில் 42 லட்சம் டெவலப்பர்கள் உள்ளதாக மைக்ரோசாஃப்ட் கணக்கீடு தெரிவிக்கிறது. இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் எதிர்காலத்தில் உருவாவர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கென ஒரு செயலியை உருவாக்கியுள்ளன. அது நம்பகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ)பயன்படுத்தப்படுகிறது. இதில் சைபர் பாதுகாப்பு மட்டுமே வங்கிகளின் மிகப் பெரிய சொத்தாகும். அதாவது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்தான் அவர்களது மிகப் பெரிய சொத்து. இதுதான் அடுத்த 10 ஆண்டுகளில் உண்மையான கரன்சியாக விளங்கும் என்றார். எனவே உங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எப்படி அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில் உள்ளது என்பதற்கேற்ப உருவாக்கப்பட வேண்டும் என்றார். அனைத்து தொழில்நுட்பங்களும் பாலின பாகுபாடின்றி, சமூக பாகுபாடின்றி, பலருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு நுட்பமானது மனித உணர்வுகளைப் போலபொறுப்பு மிக்கது. எனவே ஏஐஉருவாக்கத்தில் தார்மீக நெறிமுறைகள் மிகவும் அவசியம். இதனால் இதன் வடிவமைப்பாளர்கள் எத்தகைய பாரபட்ச தன்மையுடனும் இதை உருவாக்கக் கூடாது.அவ்விதம் பாரபட்சம் இருக்குமேயானால் அது தீர்வுகளில் பாதிப்புகளை உருவாக்கும் என்றார்.
நம்பகத் தன்மை குறித்து சுட்டிக்காட்டிய நாதெள்ளா, பல்வேறுநாடுகளில் தங்கள் நிறுவனம் செயல்பட்டாலும் அந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை காக்கும் வகையில் தகவல் தொகுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன என்றார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு 57 தகவல் தொகுப்பு மண்டலங்கள் உள்ளன. இந்தியாவில் மூன்று மண்டலங்கள் (புனே,சென்னை, மும்பை) உள்ளதாகவும், உலகம் முழுவதும் இத்தகைய மண்டலங்களை விரிவுபடுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். தகவல் தொகுப்புகளை திரட்டுவதிலும் அவற்றை பாதுகாப்பதிலும் மிகுந்த பொறுப்புடனும், நம்பகத் தன்மையுடனும் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.