Published : 25 Feb 2020 07:33 AM
Last Updated : 25 Feb 2020 07:33 AM

பிற நாடுகளில் கோவிட்-19 பரவியதன் எதிரொலி- பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

சீனா தவிர்த்து பிற நாடுகளிலும் கோவிட் 19 (கரோனா வைரஸ்) பரவியதால் பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்கநாளான நேற்று கடுமையான சரிவு காணப்பட்டது. முதலீட்டாளர்கள் பெருமளவு பங்குகளை விற்றதால், மும்பை பங்குச் சந்தையில் 807புள்ளிகள் சரிந்தன. இதனால் குறியீட்டெண் 40,363 புள்ளிகளாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 251 புள்ளிகள் குறைந்ததால் குறியீட்டெண் 11,829 புள்ளிகளானது.

பெரும்பாலான நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. டாடா ஸ்டீல் அதிகபட்சமாக 6.39 சதவீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி, மாருதி, டைட்டன், ஐசிஐசிஐ வங்கி,ஹெச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. தென் கொரியாவில் கோவிட் 19 பரவியதாகவும், இத்தாலியில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உயிர்க்கொல்லி நோயாகப் பரவும் கோவிட் 19 காரணமாக ஏற்கெனவே சர்வதேச பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது. இதிலிருந்து மீட்சியடைவது, மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருந்தது.

சர்வதேச சந்தைகளில் சரிவு

சீனாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,592 ஆக உயர்ந்துள்ளது. தென் கொரியாவில் 161 பேருக்கு நோய்த் தொற்றுஇருப்பதாக செய்திகள் வெளியானதால் சியோல் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. ஷாங்காய், டோக்யோ, ஹாங்காங் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் உலோக நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. ஜிண்டால் ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், வேதாந்தா, செயில், நால்கோ, ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் என்எம்டிசி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x