Published : 24 Feb 2020 09:51 AM
Last Updated : 24 Feb 2020 09:51 AM

ஏப்ரல் 1-க்குள் வங்கிகளை இணைப்பது சாத்தியமில்லை- வங்கி அதிகாரிகள் தகவல்

பொதுத் துறை வங்கிகள் இணைப்புக்கான காலக்கெடு நெருங்கிவருகிறது. இந்த நிலையில் அரசு அறிவித்தபடி ஏப்ரல் 1-க்குள் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்வது சாத்தியமில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிகள் இணைப்புத் தொடர்பான பல்வேறு தரப்பிலான ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழலில் திட்டமிட்டபடி ஏப்ரல் 1-ல் வங்கிகள் இணைப்பை மேற்கொள்வது மிகச் சிரமம் என்று தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சகம் ஒப்புதல்வழங்கிய பிறகும்கூட, பங்கு விகிதாச்சாரம், பங்குதாரர்களின் ஒப்புதல், பிற ஆணையங்களின் ஒப்புதல் ஆகியவற்றை நிறைவேற்றி முடிக்க இன்னும் சில காலங்கள்எடுக்கும் என்று அவர்கள் கூறினர்.

மட்டுமல்லாமல், பிரதமர் அலுவலகம், இந்த இணைப்புக்கு உள்ளாக்கப்பட இருக்கும் வங்கிகளிடமிருந்து, அடுத்த மூன்று முதல்ஐந்து ஆண்டுகள் வரையான நிதி நிலை குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. வாராக் கடன்கள், நிதி மூலதனம், கடன் அளவு உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், அடுத்தநிதி ஆண்டின் ஆரம்பத்திலேயே வங்கிகள் இணைப்பு நடவடிக்கைமேற்கொள்வதற்கான சாத்தியம்மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இணைப்பு திட்டத்தை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 30 தினங்கள் ஒதுக்கப்படும். எனவே மத்திய அரசு முன்பு அறிவித்தபடி ஏப்ரல் 1-ல் வங்கிகள் இணைப்பு மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றும் அறிவிப்பை மத்திய அரசுவெளியிட்டது. இணைப்புச் செயல்பாட்டுக்கும், அவ்வங்கிகளின் நிதிஆதாரத்தை உயர்த்தும் வகையிலும் நிதி அறிவித்தது. வங்கிகள் இணைப்பு நடப்பு ஆண்டின் ஏப்ரல்1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால்,தற்போதுவரை அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. சமீபத்தில் இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘வங்கி இணைப்பு நடவடிக்கையில் எந்தப் பின்வாங்கலும் இல்லை. உரிய நேரத்தில் சரியாக செய்து முடிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் வங்கி அதிகாரிகள், வங்கிகள் இணைப்பு தற்போது சாத்தியமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x