Published : 24 Feb 2020 09:48 AM
Last Updated : 24 Feb 2020 09:48 AM

இந்தியாவுடனான வர்த்தக உறவில் சீனாவை முந்தும் அமெரிக்கா

புதுடெல்லி

சீனா - இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவைவிட, அமெரிக்கா - இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவு சமீப ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால்இந்தியாவின் முன்னணி வர்த்தக நாடாக இருந்த சீனாவின் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018-19 நிதி ஆண்டில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 87.95 பில்லியன் டாலராக உள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 87.07 பில்லியன் டாலராக உள்ளது.

2018-ம் ஆண்டு முதல் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக்கப் போர் தீவிரம் அடையத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உறவு பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி பயணித்து வருகிறது.

சீனாவுடனான வர்த்தகம்

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தகம் 68 பில்லியன் டாலராக உள்ளது. அதுவே சீனாவுடன் 64.96 பில்லியன் டாலர் அளவிலேயே உள்ளது.

தற்போது சீனாவில் கோவிட் 19 வைரஸ் (கரோனோ வைரஸ்) பரவி வருகிற நிலையில், சீனாவுடன் இந்தியாவின் வர்த்தகம் மேலும் பாதிப்படைந்துள்ளது.

டிரம்பின் வருகையைத் தொடர்ந்து அமெரிக்க-இந்தியா வர்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இவ்விரு நாடுகளுக்கிடையே தாராளமய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், அது இந்நாடுகளுக்கிடையேயான இரு தரப்பு வர்த்தக உறவை அடுத்ததளத்துக்கு இட்டுச் செல்லும் என்று தெரிவிக்கின்றனர்.

வர்த்தக உபரி

அமெரிக்காவுடன் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி அதிகரித்து வருகிறது. தாராள வர்த்தக உறவால்இந்தியாவுக்கு அதிகப் பலன் கிடைக்கும். இந்திய உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா பெரிய சந்தையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் சீனாவுடன் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் சரிந்து வருகிறது. 2013-14முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் சீனாதான் இந்தியாவின் முன்னணி வர்த்தக நாடாக இருந்தது. அதற்கு முன்னால் ஐக்கியஅரபு அமீகரகத்துடன் இந்தியா வலுவான வர்த்தக உறவைக் கொண்டிருந்தது.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் இந்தியா வர்த்தக உபரியைக் கொண்டிருக்கிறது. ஆனால்சீனாவுடனான உறவில் வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கூடுதல்கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக வேளாண் பொருட்கள், உணவுப் பொருட்கள் சார்ந்த வர்த்தகத்தில் இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் சோளம், சோயாபீன் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் உலகில் அமெரிக்காதான் முன்னணி வகிக்கிறது. இதனால் இந்திய உற்பத்தி பாதிக்கப்படலாம். எனவே இந்தியா இவ்வகை ஒப்பந்தங்களில் கூடுதல் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டிரம்பின் இந்திய வருகையை ஒட்டி அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா எதிர்பார்ப்பு

இந்தியா தற்சமயம் அமெரிக்க விசாவுக்கான தொகையைக் குறைக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது. அதேபோல், சில இரும்பு மற்றும் அலுமினியம் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா விதித்து வரும் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண்,வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட சந்தைகளில் அதிகஏற்றுமதிக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று இந்தியத் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இந்தியாவுக்குப் பால் தயாரிப்புகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அமெரிக்க தரப்பு. சிலதகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள் மீதான வரியையும் குறைக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ட்ரம்ப் வருகை இரு நாட்டு வர்த்தக எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x