யெஸ் வங்கி பங்குகளை வாங்க இந்துஜா குழுமம் தீவிரம்

யெஸ் வங்கி பங்குகளை வாங்க இந்துஜா குழுமம் தீவிரம்
Updated on
1 min read

இந்துஜா குழுமம் யெஸ் வங்கியின் குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்துஜா குழுமம், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட செர்பரஸ் கேபிடல் மேனேஜ் மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக இவ்விரு நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியை அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது யெஸ் வங்கிக்கு அதன் வர்த்தக செயல்பாட்டை ஒழுங்கு செய்வதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் யெஸ் வங்கியில் முதலீடு விருப்பம் தெரிவித்து வருகின்றன. ஜேசி பிளவர்ஸ் அண்ட் கோ, டில்டன் பார்க் கேபிடல் மேனேஜ்மென்ட், ஓக் கில் அட்வைசர்ஸ், சில்வர் பாயின்ட் கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பங்களை சமர்ப் பித்துள்ளதாக யெஸ் வங்கி கடந்த வாரம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்துஜா குழுமம் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இந்துஜா குழுமத்தின்கீழ் இந்தஸ்இந்த் வங்கி செயல்பட்டு வருகிறது. ஒரே நிறுவனம் இருவேறு வங்கிகளில் பெரும் பங்குகளைக் கொண்டிருக்கக் கூடாது. இரு வங்கி களில் ஏதேனும் ஒன்றில் 10 சதவீதத்துக்குக்கீழ்தான் பங்குகளைக் கொண்டிருக்க முடியும். 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளைக் கொண்டிருப்பதற்கு ஆர்பிஐ கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் இந்துஜா குழுமம் 10 சதவீத அளவிலேயே யெஸ் வங்கியின் பங்குகளை வாங்கும் என்று தெரிகிறது.

அதேசமயம் இந்த ஒப்பந்தத்தில் இந்தஸ்இந்த் வங்கி எந்த விதித்திலும் பங்கேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in