

வார இறுதி நாளான நேற்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றமான வர்த்தகத்தைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 517 புள்ளிகள் ஏற்றம் கண்டு 28067 புள்ளிகளில் முடிந்துள்ளது. பங்கு வர்த்தகர்களுக்கு இந்த ஆண்டில் அதிக லாபம் தந்த மூன்றாவது நாளாக நேற்று அமைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 162 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8518 புள்ளிகளில் முடிந்துள்ளது. சுமார் 2 சதவீதம் அளவுக்கு பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டிருந்தன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1,791 பங்குகள் ஏற்றத்தையும், 1,055 பங்குகள் இறக்கமும் கண்டிருந்தன. மிட்கேப் குறியீடு 2.01 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 1.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கிப் பங்குகள் அதிகபட்சமாக 8.77 சதவீதம் லாபம் கண்டது. ஜூலை மாதத்துக்கான மொத்தவிலைக் குறியீடு -4.05 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு நடவடிக்கை எடுக்க சாதமான சூழல் உருவாகி வருகிறது என முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பும் சந்தை உயர்வுக்கு காரணம் என முகவர்கள் தெரிவித்தனர். நேற்றைய வர்த்தக நேர முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 65 என்கிற அளவில் இருந்தது.