

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹீரோமோட்டோகார்ப் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளில் ரூ.10 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகளில் இந்த முதலீடு செய்யப்படும் என்று நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜால் தெரிவித்துள்ளார்.
மாற்று எரிபொருளில் இயங்கும் வாகன தயாரிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளதாக அவர் கூறினார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனஉற்பத்தி செய்யும் நிறுவனமாக ஹீரோ மோட்டார்ஸ் கடந்த 19 ஆண்டுகளாக திகழ்கிறது. இந்நிறுவன வாகனங்கள் 40 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தம்முறிந்த பிறகு 2011-ம் ஆண்டிலிருந்து தனி நிறுவனமாக சுய தொழில்நுட்பத்தில் இந்நிறுவனம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலத்தில் இந்நிறுவனம் உருவாக்கிவரும் புதிய ஆலை இந்த ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.