Published : 19 Feb 2020 08:12 AM
Last Updated : 19 Feb 2020 08:12 AM

நிதிப் பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு நிச்சயம் எட்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டம்

மத்திய அரசு நிர்ணயித்தபடி நிதிப் பற்றாக்குறை அளவை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் 3.5 சதவீத அளவில் கட்டுப்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதிபட தெரிவித்தார்.

பட்ஜெட் மேலாண்மை மற்றும் நிதி பொறுப்பு (எஃப்ஆர்பிஎம்) குறித்த விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளதாகவும், எட்டக்கூடிய இலக்கையே அரசு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.8 சதவீத அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இது 3.3 சதவீத அளவுக்கு கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் நிதி ஆண்டில் (2020-2021) பற்றாக்குறை இலக்கு3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் மேலாண்மை மற்றும்நிதிப் பொறுப்பு குழு வரையறுத்த அளவீட்டின்படிதான் நிதிநிர்வாகத்தை அரசு செயல்படுத்துகிறது. கூடுதலாக ஏற்பட்ட 0.5 அளவு நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும். அடுத்த ஆண்டில் சிறு சேமிப்பு மூலம் நிதி திரட்டப்பட்டு நிர்ணயித்த இலக்கு எட்டப்படும் என்றார்.

என்.கே. சிங் தலைமையிலான எஃப்ஆர்பிஎம் குழு 2020-21-ம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 2.8 சதவீதமாகவும், 2023-ல் 2.5 சதவீதமாகவும் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

இருப்பினும் இக்குழு சில விதிவிலக்குகளையும் அறிவித்துள்ளது. அதன்படி தேச பாதுகாப்பு, போர்ச் சூழல், இயற்கைச் சீற்றம், வேளாண் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நிதிப் பற்றாக்குறை இலக்கு எட்ட முடியாமல் போனால்அதை ஏற்கலாம் என குறிப்பிட்டுள்ளது. ஆண்டுக்கு 0.5 சதவீத அளவுக்கு விலக்கு அளித்துள்ளதையும் சக்திகாந்த தாஸ் சுட்டிக்காட்டினார்.

அடுத்த நிதி ஆண்டில் நிச்சயம் அரசு பற்றாக்குறை இலக்கை எட்டிவிடும் என்றார். இதை எட்டமுடியுமா என்று ஒருவரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு 15 தினங்கள்தான் ஆகின்றன. எனவே அதற்குள்ளாகவே அதுவும் நிதி ஆண்டுஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் இது குறித்த சந்தேகம் அநாவசியமானது என்றார். 2021-ம் ஆண்டில் அரசு எட்டவுள்ள பட்ஜெட் இலக்கானது எட்ட முடியாத அளவில் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

2020-21-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் சில கடன் பத்திரங்களில் வெளிநாட்டினர் எவ்வித வரம்பும் இன்றி முதலீடு செய்ய வழி ஏற்படுத்தியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல இந்த பட்ஜெட்டில் நிறுவனங்கள் 9 சதவீதம் முதல் 15 சதவீத வட்டியில் கடன் பத்திரங்கள் வெளியிட அனுமதித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். இதனால் வெளிநாட்டினர் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகள் மூலம் நிதி திரட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளது. மேலும் தற்போதே நிறுவனங்கள் இசிபி மூலமாக வெளிநாட்டிலிருந்து நிதி திரட்ட வழி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டிலிருந்து நிதி திரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் எவ்வித பிரச்சினைகளும் உருவாகாமல் ஆர்பிஐ உத்தரவாதம் அளிக்கும் என்றார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பட்ஜெட்டில் ஜிடிபி வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறுகிய காலத்தில் எட்டக்கூடிய வகையில் உள்ளன. தனிநபர்வரி விதிப்பில் சலுகை, வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் அதிகரிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது, கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் உற்பத்தித்துறை, மின்னணு மற்றும் ஜவுளி தொழில் முன்னேற்றத்துக்கு தேவையான வழிமுறைகள் பட்ஜெட்டில் காணப்பட்டுள்ளன என்றார்.

பட்ஜெட் மதிப்பீடுகளை தரச்சான்று நிறுவனங்களும் ஏற்கின்றன. பிட்ச் தரச்சான்று நிறுவனம் வருவாய் 10 சதவீத அளவில் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

நிறுவன வரி குறைப்பு உள்ளிட்டவற்றால் குறுகிய கால அடிப்படையில் அரசின் வரி வருவாய் குறையும் என்றாலும் நீண்ட கால அடிப்படையில் இது மிகச் சிறந்த பலனை அளிக்கும் என்றும், அரசின் பங்கு விலக்கல் இலக்கு எட்டக் கூடியதே என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேக்க நிலையைப் போக்குவதற்காக நிறுவன வரிவிதிப்பை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அரசு குறைத்தது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவாக 4.5 சதவீத அளவுக்கு சரிந்ததை அடுத்து அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.

பட்ஜெட்டில் இல்லாத சலுகையாக அறிவிக்கப்பட்ட நிறுவன வரி குறைப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றதையும் பிட்ச் சுட்டிக் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x