

புதிய ஜவுளிக் கொள்கை மூலமாகஎதிர்காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெறும் என திருப்பூரில் நேற்று 47-வதுஇந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியை நேற்று தொடங்கிவைத்து மாநில கைத்தறிகள் மற்றும் ஜவுளித் துறை இயக்குநர் எம்.கருணாகரன் தெரிவித்தார்.
ஆயத்தஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) மற்றும் ஐகேஎஃப் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இக்கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஜவுளித்துறை இயக்குநர் எம்.கருணாகரன் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டில் ஜவுளித் துறையை பொறுத்தவரை தமிழகம் முக்கியபங்காற்றி வருகிறது. இதன் முக்கியத்துவம் கருதியும், மேம்படுத்தும் நோக்கிலும் கடந்த ஆண்டு ஜவுளிக் கொள்கை வெளியிடப்பட்டது. அந்த கொள்கையின்படி சமச்சீர் வளர்ச்சிக்கும், ஏற்கெனவே உள்ள செயலாக்க துறைகள், பின்னலாடை துறை, விசைத்தறி துறைஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு துறைக்கும் தனிப்பட்டபல்வேறு ஊக்க நிதிகளை அளித்து,அதற்கான அரசாணைகளை விரைவில் வெளியிட உள்ளோம். குறிப்பாக கடன் வாங்கும் நிறுவனங்கள் 4 சதவீதம் வட்டி சலுகை என்பதை 6 சதவீதமாக தொழிற்கொள்கையில் மாற்றப்பட்டுள்ளது.
தொழில் பூங்காக்களை அமைப்பதற்கும், சிறிய அளவிலான தொழில் பூங்காக்கள், பெரிய அளவிலான தொழில் பூங்காக்கள்அமைக்கவும் தொழிற்கொள்கையில் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் தொழில் தொடங்குவோருக்கும் தொழிற்கொள்கையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. புதிய ஜவுளிக் கொள்கை மூலமாக எதிர்காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் பேசியதாவது: திருப்பூரில் நடைபெறும் கண்காட்சியில் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டுபருத்தி மற்றும் செயற்கை நூலிழைகளால் ஆன ஆடைகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக பின்னலாடை ஏற்றுமதியில் தொய்வு உள்ளது. இந்த கண்காட்சிக்கு பிறகுஏற்றுமதியில் ஒரு மாற்றம் ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம். வெளிநாட்டு வர்த்தகர்களிடம் தற்போது சீனாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை இல்லாமல், இந்தியாவையும் எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது நமது ஏற்றுமதி வளர்ச்சிக்கு நன்மை அளிக்கும் என்றார்.
கண்காட்சியை பொறுத்தவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பிரபல முன்னணி பிராண்டட் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள், புதிய வரவுகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தியுள்ளன.