

வருமான வரி தொடர்பாக மத்திய அரசின் புதிய வரி விதிப்பு முறைஇந்தியக் குடும்பங்களின் சேமிப்பைகடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு இம்மாதம் 1-ம் தேதி வெளியிட்டது. அதில் வருமான வரியில் புதிய வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வரி விகிதம் கணிசமாகக்குறைக்கப்பட்டதால் தற்போது நடைமுறையில் இருக்கும் வரிவிதிப்பு முறையில் வழங்கப்பட்டுவரும் வரி சலுகைகள் பலவும் நீக்கப்பட்டன.
வரிச் சலுகைகள் நீக்கம்
இந்த புதிய வரி விதிப்பை தேர்வுசெய்பவர்கள் எல்ஐசி, வீட்டு வாடகை, வீட்டு கடன் வட்டி போன்றவற்றுக்கு வருமான வரிச் சலுகை பெற முடியாது. அந்தவகையில் மக்கள் அவர்கள் தேவைக்கேற்ப புதிய வரி முறையையோ அல்லது பழைய வரி முறையையோ பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் புதிய வரி விதிப்பு முறையை 80 சதவீதம் மக்கள்தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய வரி முறையால் மக்களின் சேமிப்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப்பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிஸி- யின் பேராசிரியர் பானுமூர்த்தி கூறும்போது, ‘தற்போது இந்தியாவின் பொருளாதாரம் கடும் மந்தநிலையில் உள்ளது. தேவை குறைந்திருப்பதே தற்போதைய நெருக்கடிக்கு முக்கியக் காரணம்.பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு நிறுவன வரியை குறைத்தது.
தற்போது வருமான வரியிலும் மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. இதனால் மக்களின் வாங்கும் திறன் உயர்ந்து தேவை உயரக்கூடும். ஆனால் மக்களின் சேமிப்பு பெருமளவில் பாதிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.