

வருவாய் பகிர்வு தொகை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதன் நிலுவைத் தொகையை வெள்ளிக்கிழமை இரவுக்குள் (பிப்.14) செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு துறை அல்லாத ஆனால் தொலைத் தொடர்பு உரிமம் பெற்றிருக்கும் பிற நிறுவனங்களும் நிலுவை தொகையைச் செலுத்த வேண்டுமென தொலைத் தொடர்பு துறை கேட்டுக்கொண்டது. இதுகுறித்து தொலைத் தொடர்பு விவகாரங்களுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (டிடிஎஸ்ஏடி) நாட உள்ளதாக ஆயில் இந்தியா, கெயில் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன்வருவாய் அடிப்படையில் அரசுக்குகுறிப்பிட்டத் தொகையை செலுத்தவேண்டும். அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்கு செலுத்த வேண்டும்.
அதேபோல் தொலைத் தொடர்புத் துறை அல்லாத ஆனால் தொலைத் தொடர்புக்கான உரிமம் பெற்றிருக்கும் பிற நிறுவனங்களும் அதற்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆயில் இந்தியா, கெயில் இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் தொலைத் தொடர்பு உரிமம்பெற்றிருக்கின்றன. இந்நிறுவனங்கள் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்களைப் போலவே உரிமத்துக்கான ஏஜிஆர் தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் இந்நிறுவனங்களுக்கு ரூ.2.7 லட்சம் கோடி அளவில் நிலுவை உள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு தொடர்பாக தெளிவு வேண்டி இந்நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. கடந்த பிப்.14 தேதிஅம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்நிறுவனங்கள் தொலைத் தொடர்பு விவகாரம் தொடர்பான தீர்வு ஆணையத்தை அணுக வேண்டும் என்று தெரிவித்தது. அதைத் தொடர்ந்தே இந்நிறுவனங்கள் தொலைத் தொடர்பு துறை விவகாரங்களுக்கான தீர்வுமற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுக முடிவெடுத்துள்ளன.
இதுகுறித்து ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுஷில் சந்திரமிஸ்ரா கூறியபோது, ‘கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்குப் பொருந்தாது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் வேறு; எங்களது செயல்பாடுகள் வேறு. எனவே இவ்விவகாரம் தொடர்பாக தொலைத் தொடர்பு விவகாரங்களுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டு ஆணையத்திடம் செல்ல உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.48,500 கோடி, கெயில் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.83 லட்சம் கோடி, பவர் கிரிட் கார்ப்பரேசனுக்கு ரூ.21,953 கோடி மற்றும் குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்துக்கு ரூ.15,020 கோடியும் நிலுவை உள்ளது. இது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலுவையை விட இரு மடங்கு அளவில் அதிகம்.