

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், கடந்த 2014-15 நிதி ஆண்டில் இதன் மூலம் ரூ.24,373 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது.
எல்ஐசிக்கு 2013-14-ம் நிதி ஆண்டில் பங்குச் சந்தை முதலீடு மீது ரூ.21,257 கோடி லாபமாக கிடைத்தது. இதனுடன் ஒப்பிடும்போது, 2014-15 நிதியாண்டில் சுமார் 15 சதவீத அளவுக்கு லாபம் அதிகரித் திருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் புதிதாக ரூ.7,328 கோடி மட்டுமே பங்குச் சந்தையில் எல்ஐசி முதலீடு செய்தது.
எல்ஐசி நிறுவனம் இப்போது பங்குச் சந்தையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறது. பெரும்பாலான புளுசிப் நிறுவனப் பங்குகளில் கணிசமான பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது. இதன்மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் தனிப்பட்ட பெரிய முதலீட்டாளராக எல்ஐசி விளங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு 30 கோடிக்கும் மேலான பாலிசிதாரர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் கையாளும் சொத்து மதிப்பு சுமார் ரூ.17.7 லட்சம் கோடி ஆகும்.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி அரசு பத்திரங்களில் எல்ஐசி ரூ.10.35 லட்சம் கோடியை முதலீடு செய்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் மேலும் ரூ.3.75 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
விதிமுறைகளின்படி எல்ஐசி வசம் உள்ள நிதியில் 50 சதவீத அளவுக்கு அரசு பத்திரங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் 66 சதவித நிதி அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வங்கித் துறை பங்குகளில் எல்ஐசி வசம் 9.21 சதவீத பங்குகள் உள்ளன.