Published : 16 Feb 2020 10:04 AM
Last Updated : 16 Feb 2020 10:04 AM

வங்கி இணைப்பில் எந்தப் பின்வாங்கலும் இல்லை; விவசாயிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

வங்கிகள் விவசாயிகளுக்கு வழங்கி வரும் கடன்களை மத்திய அரசு கண்காணித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விவசாயி களுக்கு அதிக அளவில் கடன் கிடைக்கச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடு பட்டிருப்பதாகவும் அடுத்த நிதி ஆண்டுக் குள் ரூ.15 லட்சம் கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக வும் அவர் கூறினார். மேலும் பொதுத் துறை வங்கிகள் இணைப்பில் எந்தப் பின்வாங்கலும் இல்லை; திட்டமிட்டப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரி வித்தார்.

2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட் ஜெட்டை மத்திய அரசு இம்மாதம் 1-ம் தேதி வெளியிட்டது. அதில் விவசாயிகள் மேம்பாட்டுக்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 2022-க்குள் விவசாயி களின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தவிர வேளாண் துறை சார்ந்த வளர்ச்சிக்கென ரூ.1.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் வரும் நிதி ஆண்டுக்கென ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த நிதி ஆண்டில் ரூ.15 லட்சம் கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் உள்ள இலக்கைவிட 11 சதவீதம் அதிகம். நடப்பு நிதி ஆண்டில் ரூ.13.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

நேற்று டெல்லியில் ரிசர்வ் வங்கி இயக் குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது: ‘விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கும் வகையில் கடன் வரம்பு உயர்த் தப்பட்டுள்ளது. வங்கிகளின் கடன் வழங் கும் செயல்பாட்டை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். குறிப்பாக கிராமப்புறங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் அளவை கவனித்துவருகிறோம். தேவை அதிகரித்து, அதற்கேற்ப கடன் வழங்குதலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கிறோம். இதனால் வரும் நிதி ஆண் டில் கடன் வழங்குதல் தொடர்பாக நிர்ண யிக்கப்பட்ட இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

விவசாய கடன்களுக்கான வட்டி 9 சத வீதமாக உள்ளது. இந்நிலையில் விவசாயி களுக்கு குறுகியக் கால விவசாயக் கடன் கள் எளிதாக கிடைத்திடும் வகையில் மத்திய அரசு மொத்த வட்டி விகிதத்தில் 2 சதவீத வட்டிக்கு மானியம் வழங்குகிறது. இதனால் ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு இது வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்துக்கு இன்னும் 45 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், திட்டமிட்டபடி வங்கி இணைப்பு நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியபோது, ‘வங்கி இணைப்பு திட்டத்தி லிருந்து பின்வாங்க எந்த வாய்ப்பும் இல்லை. உரிய நேரத்தில் அனைத்தும் செயல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

‘வட்டிக் குறைப்பின் பலனை விரைவில் காணலாம்’: சக்திகாந்த தாஸ்

‘வட்டிக் குறைப்பின் பலனை விரைவில் காணலாம்’ என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கடன் வழங்குதல் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வட்டிக் குறைப்பினால் கடன் வழங்குதல் மேலும் வளர்ச்சி காணும்’ என்று தெரிவித்தார். 
வட்டிக் குறைப்பு பலனளிக்கவில்லை என்பதை ஏற்க முடியாது என்று கூறிய அவர், வட்டிக் குறைப்பு, மெதுவாக பலனளிக்கத் தொடங்கியுள்ளது. வரும் மாதங்களில் கடன் வழங்கும் அளவு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டின் கடைசி நிதிக் கொள்கை கூட்டம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. முந்தைய அளவான 5.15 சதவீதமே தற்போதும் தொடரும் என்று ஆர்பிஐ அறிவித்தது. பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய கூட்டத்திலும் வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக 5 முறை வட்டி விகிதத்தைக் குறைத்தது. கிட்டத்தட்ட 135 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வட்டிக் குறைப்பை வங்கிகள் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் வட்டிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. இந்நிலையில் தற்சமயம் வட்டிக் குறைப்பு பலனை முழுமையாக மக்களிடம் சென்று சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே வட்டிக் குறைப்பின் பலனை விரைவில் காணலாம் என்று கூறியுள்ளார்.

ஜூலை முதல் ஜூன் வரையிலான ஓராண்டு ரிசர்வ் வங்கிக்கான நிதி ஆண்டாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஆண்டான ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தையே ரிசர்வ் வங்கிக்கும் நிதி ஆண்டாக பின்பற்ற திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x