தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் தொகை விவகாரம் ரூ.1.47 லட்சம் கோடி நிலுவையை நள்ளிரவுக்குள் செலுத்தக் கெடு

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் தொகை விவகாரம் ரூ.1.47 லட்சம் கோடி நிலுவையை நள்ளிரவுக்குள் செலுத்தக் கெடு
Updated on
2 min read

‘தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வருவாய் பகிர்வுத் தொகையை (ஏஜிஆர்) செலுத்துவதில் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளன. அந்நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத தொலைத் தொடர்பு துறையும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. அந்தவகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களும், மத்தியத் தொலைத் தொடர்புத் துறையும்நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளன’ என்று டெல்லி உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடிஉள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்ட கால அவகாசத்துக்குள் ஏஜிஆர்தொகையை செலுத்த தவறியதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. அதேபோல், மத்திய தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளையும் ஆஜராகக் கூறியுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளி ரவுக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவில் 22.22 சதவீதம் அளவில் சரிந்து ரூ.3.50-க்கு வர்த்தகமானது. ஏஜிஆர் நிலுவையில் குறிப்பிட்டத் தொகையை இன்று இரவுக்குள் செலுத்த வேண்டும் என்றும் மீத தொகையை மார்ச் 17-க்குள் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வோடஃபோன் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்கு குறிப்பிட்டத் தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தனியே மனு தாக்கல் செய்தன. அம்மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனவரி 23 அன்றுநிலுவைத் தொகையை செலுத்த முடியாத நிலையில் அந்நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறையிடம் காலஅவகாசம் கேட்டன. அந்நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுஇவ்வழக்குத் தொடர்பாக இறுதித் தீர்ப்பு வரும்வரை அந் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தொலைத் தொடர்புத் துறையின் அந்த நடவடிக்கையை நேற்று உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ள நிலையில், தொலைத் தொடர்புத் துறைஅந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வழக்குத் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மார்ச் 17-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.53,039 கோடி, ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.35,586 கோடி அளவில் நிலுவை உள்ளது. ஜியோ நிறுவனம் 2016-ம் ஆண்டே தொலைத் தொடர்புத் துறையில் கால்பதித்தது. எனவே அந்நிறுவனத்துக்கு மிகக் குறைந்த தொகையே நிலுவையாக இருந்தது. இதனால் ஜியோ உரிய காலத்தில் அத்தொகையை செலுத்திவிட்டது. பிற நிறுவனங்களுக்கு பெரும் தொகை நிலுவையாக உள்ளதால். அவை கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இதில் ஏர்டெல் நிறுவனம்ஏஜிஆர் தொகை செலுத்துவதற்காக நிதி திரட்டிவிட்டது. ஆனால், வோடஃபோன் ஐடியா போதிய நிதியின்றித் திணறிவருகிறது. இந்தச் சூழலில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே தொலைத் தொடர்பு துறையில் செயல்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது சரியான போக்கு அல்ல என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வோடஃபோன் ஐடியா அதன் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் முடிந்த மூன்றாம் காலாண்டில் வோடஃபோன் ஐடியா ரூ.6,453 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ரூ.50,898 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது.

இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 2.3 சதவீதம் உயர்ந்து ரூ.11,089 கோடியாக உள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று கடும் சரிவைக் கண்ட நிலையில் அதன் சந்தை மதிப்பு ரூ.2,988 கோடி சரிந்து ரூ.9,884 கோடியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in