

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.
இவ்வழக்குத் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. அதேபோல், சிபிஐ கூறியபோது, இவ்வழக்குத் தொடர்பான தகவல்களை மலேசியாவில் இருந்து பெறுவதற்கு அங்குள்ள நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தது.
கடந்த 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம்,இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செலின் 74 சதவீதப் பங்குகளை வாங்கியது. ரூ.3,500 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அந்நிய முதலீட்டு விதிகளை மீறி ஒப்புதல் வழங்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பங்கை வழங்க வேண்டும் என்றநிபந்தனை அடிப்படையில் ப.சிதம்பரம் விதிமீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்குத் தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவரும் ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனவரி 31-ல் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்தே அமலாக்கத் துறைமற்றும் சிபிஐ இவ்வழக்கின் விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளன. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்.20 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.