

நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் மத்திய அமைச்சகம் ரூ.2,500 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இம்மூன்று காப்பீட்டு நிறுவனங்களின் நிதி நிலை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் இந்நிறுவ னங்களை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் உடனடியாக நிதி வழங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இம்மூன்று நிறுவனங்களுக்கும் அதன் நிதி ஆதாரத்தை உயர்த்தும் வகையில் ஏற்கெனவே நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.2,500 கோடி நிதி அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரூ.2,500 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
இந்நிறுவனங்களின் நிதி மூலதனம் முழுமையாக மேம்பட இன்னும் கூடுதலாக ரூ.12 ஆயிரம் கோடி தேவை என்று கூறப் படுகிறது.
கடந்த 2018-19 நிதி ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இம்மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த மூன்று காப்பீட்டு நிறுவனங்களின் நிதிநிலை கவலைக்கிடமாக இருப்பதால் இணைப்பு நடவடிக்கையை நிறைவேற்று வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.